ஞாயிற்றுக் கிழமை மாலை வரை அவகாசம் தருகிறேன், அமைதி திட்டத்தை ஏற்காவிட்டால் நரகத்தை பார்க்க நேரிடும் என ஹமாஸ் அமைப்புக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாகப் போர் நீடித்து வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகள் பலவும் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர 20 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் அண்மையில் அறிவித்தார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்பதாக அறிவித்தார். ஆனால் ஹமாஸ் தரப்போ அவகாசம் கேட்டது. இந்நிலையில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஞாயிற்றுக்கிழமை 6 மணிக்குள் அமைதி திட்டத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளார்.
இது அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு என்று கூறியுள்ள டிரம்ப், அமைதியை ஏற்காவிட்டால், நரகம் எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு நாங்கள் காட்ட நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
















