ரஷ்யாவிடம் இருந்து யுரேனியத்தை தடையின்றி வாங்கும் அமெரிக்கா, ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்கக் கூடாது என்று இந்தியா மீது அழுத்தம் கொடுத்திருப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. அமெரிக்காவின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ரஷ்ய அதிபர் புதின் தோலுரித்து காட்டியிருப்பது பேசு பொருளாகியுள்ளது..
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா, உக்ரைன் போருக்கு மறைமுகமாக நிதியுதவி செய்கிறது என்பது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிலைப்பாடு. இதன் காரணமாகவே இந்திய பொருட்களுக்குக் கணிசமாக வரி விதித்த டிரம்ப், எங்குச் சென்றாலும் சொன்னதையே சொல்லும் கிளி போல, இந்தியா, ரஷ்ய போருக்கு உதவுவதாகக் குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இரட்டை நிலைப்பாட்டைத் தோலுரித்து தொங்கவிட்டுள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ரஷ்யாவின் சோச்சி நகரில் வால்டாய் (VALDAI) மன்றத்தில் இந்தியா உள்பட 140 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த மாநாட்டில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகவும், கிரெம்ளின் கைகளை கட்டிப் போடுவதற்காகவும், ரஷ்யாவின் வர்த்தக கூட்டாளிகளை, குறிப்பாக இந்தியாவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிக்கும் அழுத்தங்களை அம்பலப்படுத்தினார்.
“அணுசக்தி தொழில்துறைக்காக ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து யுரேனியத்தை வாங்குகிறார், அதே நேரத்தில் மாஸ்கோவிடமிருந்து எரிசக்தியை வாங்க வேண்டாம் என இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்” என்று அமெரிக்க அதிபர் டிரம்பின் பாசாங்குதனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
டிரம்பின் தவறான வரி விதிப்பு கொள்கைகளை பிரதிபலித்த ரஷ்ய அதிபர் புதின், அமெரிக்கா தனது அணுசக்தி துறைக்குத் தேவையான யுரேனியத்தை ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து வாங்குவதையும், அதே நேரத்தில் மாஸ்கோவில் இருந்து எரிசக்தி இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியா போன்ற நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதையும் கோடிட்டு காட்டினார்.
அமெரிக்காவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதில் ரஷ்யா இரண்டாவது இடத்தில் இருப்பதாகக் கூறிய புதின், 2025ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு யுரேனியம் விற்பனை செய்வதன் மூலம் சுமார் 1.2 பில்லியன் டாலர்களை ரஷ்யா ஈட்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
அணுமின் நிலையங்களை பயன்படுத்தும் மிகப்பெரிய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று எனக் குறிப்பிட்ட புதின், அமெரிக்க சந்தைக்கு யுரேனியத்தை வழங்கும் மிகப்பெரிய விநியோகஸ்தராக ரஷ்யா இல்லையென்றாலும், இரண்டாவது பெரிய விநியோகஸ்தராக உள்ளது என்றும் கூறினார். அமெரிக்க சந்தைக்கு யுரேனியத்தை வழங்குவதில் ரஷ்யா 25 சதவிகித பங்கைக் கொண்டுள்ளது.
2024ம் ஆண்டில் அமெரிக்காவுக்கு யுரேனியம் ஏற்றுமதி செய்ததன் மூலம் ரஷ்யா 800 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியுள்ளது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக இந்தியாவை தண்டிக்கும் நோக்கத்துடன் டிரம்ப் 50 சதவிகித வரியை விதித்தார் என்றும், ஆனால் மாஸ்கோவிடம் இருந்து எண்ணெய் அதிகம் வாங்கும் சீனா, இந்தியா இல்லாவிட்டாலும், ரஷ்யாவுக்கான நிதி ஆதாரம் அமெரிக்கா மற்றும் வேறு வழிகளில் கிடைத்து விடுவதாகவும் என மறைமுகமாகச் சாடினார் புதின்.
விசித்திரமான அமெரிக்க அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதை நிறுத்துமாறு பலமுறை வலியுறுத்தி வருகிறார். ஆனால் உண்மையில் அமெரிக்காவே ரசாயனங்கள், யுரேனியம் மற்றும் உரங்களை ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து வாங்கிக் கொண்டு இருக்கிறது.
ஒரு பக்கம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு சர்வதேச நாடுகளை வலியுறுத்தும் அமெரிக்கா, வேறு சிலவற்றிற்காக ரஷ்யாவையே சார்ந்திருக்கிறது என்பதை ரஷ்ய அதிபர் புதினின் பேச்சு வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மேலும், அமெரிக்காவின் பாசாங்குதனத்தையும், இரட்டை வேடத்தையும் சர்வதேச சமூகம் முன்பு தோலுரித்தும் காட்டியுள்ளது. இனிமேலாவது அமெரிக்கா திருந்துமா பார்க்கலாம்.
















