2014க்கு முன் பலவீனமான பொருளாதார நாடாக இருந்த இந்தியா இன்று, முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்காகப் பீகாரில் ஜன் நாயக் கர்பூரி தாக்கூர் திறன் பல்கலைக்கழகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
பீகாரின் புதுப்பிக்கப்பட்ட முக்கிய மந்திரி நிச்சய ஸ்வயம் சஹாயத பட்டா யோஜனாவின் கீழ் 5 லட்சம் பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
மேலும், பீகாரில் உள்ள நான்கு பல்கலைக்கழகங்களில் புதிய கல்வி மற்றும் ஆராய்ச்சி வசதிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, பிஹ்தாவில் உள்ள NIT பாட்னாவின் புதிய வளாகத்தையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
முன்னதாக டெல்லியின் விஞ்ஞான் பவனில் இருந்து காணொலி வாயிலாகப் பேசிய பிரதமர் மோடி, உலகின் அதிக இளைஞர்களை கொண்ட நாடாக இந்தியா இருப்பது, நமது மிகப்பெரிய பலம் என்றும், பீகாரில் இளைஞர்கள் வளர்ச்சி அடையும் போது நாட்டின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.
மேலும், தற்போது நாட்டில் ஜிஎஸ்டி சேமிப்பு கொண்டாட்டம் நடைபெற்று வருவதாகவும், இதனால் ஏராளமான இளைஞர்கள் வாகனங்கள் வாங்கி மகிழ்வதாக ஒருவர் தன்னிடம் கூறியதாகவும் பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்தார்.
பீகார் இளைஞர்களுக்கும், நாட்டுக்கும் தேவையான பெரும்பாலான பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு செய்ததற்காகத் தனது வாழ்த்துகளையும் பிரதமர் மோடி தெரிவித்தார்.