அருட்பெரும் சோதியான வள்ளலார் அவதார தினம் இன்று. ‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற காப்பிய மொழிக்கேற்ப, தன் வாழ்நாள் முழுவதும் மக்களின் பசிப்பிணி போக்குவதற்கே செலவழித்த வள்ளலார் பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
உலகிலேயே ஒரு அதிசயமான புண்ணிய பூமி தமிழ்நாடு ஆகும். எந்த காலத்துக்கு என்ன தேவையோ அதை மக்களுக்கு வழங்க இறைவனே ஒரு ஞானியை அனுப்பி வைப்பான். அந்த வரிசையில் வந்தவர் தான் வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இராமலிங்க சுவாமிகள்.
1823ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி, கடலூர் அருகே மருதூர் கிராமத்தில் வள்ளலார் அவதரித்தார். தந்தை ராமையா பிள்ளை-சின்னம்மையார் தம்பதியருக்கு திருமகனாக பிறந்த அவரது பெற்றோர் இராமலிங்கம் என்று பெயர் வைத்தனர்.
கருவிலேயே திருவுடைய இராமலிங்கத்துக்கு, சிறுவயதிலேயே, திருவொற்றியூர் வடிவுடையம்மன் நேரில் வந்து உணவூட்டிய அதிசயம் நடந்தது. தனது 9-வது வயதில் பல தெய்வப் பனுவல்களை மனப்பாடமாகப் பாடும் ஆற்றல் பெற்ற வள்ளலார், தனது 12 வயதிலேயே இறைப்பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
அன்றைய காலக் கட்டத்தில் , சென்னையில் பெரும்புலவராக விளங்கிய தொழுவூர் வேலாயுதனார் வள்ளலாரின் மாணவரானார் என்பதே வள்ளலாரின் பெருமையைச் சொல்லும். 1850ஆம் ஆண்டு, தனது உறவினர்களின் வற்புறுத்தலால் தனது சகோதரி மகளான தனம் அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார் வள்ளலார்.
1858 ஆம் ஆண்டு, வள்ளலார், இல்லற வாழ்வைத் துறந்து, முழுமையான இறைவாழ்வை மேற்கொண்டார். தலயாத்திரையாக கிளம்பியவர் , வடலூர் அருகே உள்ள கருங்குழி கிராமத்தில் மணியக்காரர் இல்லத்தில் வந்து தங்கினார். 1867ஆம் ஆண்டு வரை வள்ளலார் கருங்குழி கிராமத்திலேயே வாழ்ந்து வந்தார்.
1867-ம் ஆண்டு மே மாதம் 23-ம் நாள் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத் தொடங்கினார். அன்று வள்ளலார் திருக்கரத்தால் ஏற்றப்பட்ட அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது
வடலூர் வள்ளலார் தெய்வநிலையம் என்பது அவர் உருவாக்கிய ஞானசபை, தருமச்சாலை, ஜோதியாய் மறைந்த சித்தி வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
வள்ளலார் தான் கண்ட சுத்த சன்மார்க்கத்துக்குத் தனிப்பெயர், தனிக்கொள்கை, தனிக்கொடி, தனிஇடம் ஏற்படுத்தி அவற்றுக்கு திருமந்திரம், சபை, சாலை, வழிபாட்டு விதிகள், கட்டளைகள், நூல்கள், உரைகள், பாடல்கள் முதலியவற்றை வழங்கியுள்ளார்.
வள்ளலார் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞானசபையில் தம் கைப்பட ஒரு திருவிளக்கை ஏற்றி அதற்கு முன்பாக ஐந்தடி உயரமுள்ள ஒரு கண்ணாடியையும் அமைத்தார். கண்ணாடிக்கு முன்னால் கருப்பு,நீலம், பச்சை, சிவப்பு,மஞ்சள்,வெள்ளை,புகை நிறம் ஆகிய 7 திரைகள் அமைத்தார். தைப்பூசத் திருவிழாவின் போது 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. சத்திய ஞானசபையில் வள்ளலார் ஏற்படுத்திய வழிமுறைகளின் படியே ஜோதிவழிபாடு இன்றும் நடைபெறுகிறது.
இம்மண்ணுலகில் 50 ஆண்டுகள் 3 மாதங்கள் 25 நாள்கள் வாழ்ந்த வள்ளலார், 1874 -ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி ஜோதியில் கலந்தார். உயிர்களைப் பசியிலிருந்து காப்பதும், பிணியிலிருந்து விடுவிப்பதும், இயலாதோரை பேணிக்காப்பதும் இறைத்தொண்டு என்று ஆன்மிக வாழ்வுக்குப் புது இலக்கணம் படைத்த வள்ளலாரை போற்றுவோம்.