இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் தொண்டு நிறுவனங்களின் நிதி, பயங்கரவாத செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்து விவரிக்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
கனடாவில் Khalsa Aid, Sikh Relief, World Sikh Organisation போன்ற பெயர்களில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள், பயங்கரவாத செயலுக்குத் துணை போவது அண்மையில் கண்டறியப்பட்டது.
சீக்கிய மக்களின் நலனுக்காக இயங்கி வருவதாக முகமூடி போட்டுக் கொண்டு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, நிதிஉதவி அளித்தது வெட்ட வெளிச்சமானது.
Babbar Khalsa International மற்றும் Khalistan Tiger Force போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு, இது போன்ற தொண்டு நிறுவனங்களே அடிநாதம் என்பது உறுதியானது. இதனையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய கனடா உளவுத்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
கனடாவில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனங்களின் நிதி, ஹவாலா மூலமாகவோ, கிரிப்டோ மூலமாகவோ காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. நல்ல வேலை…. உண்மை இப்போதாவது புலப்பட்டதே என அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள்.
மேலும் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் அவர்களுக்குக் கிடைத்தது. அது என்னவென்றால்… பாகிஸ்தான் உளவுத்துறை இதற்குப் பின்னணியில் இருப்பது தான். கனடாவில், காலிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு செயல்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு எங்கிருந்து நிதி வந்தது எனத் தோண்டி துருவிய போது, அதிகாரிகளுக்கு ஓர் உண்மை புலப்பட்டது.
பேரிடர் கால நிதியாகச் சில அறக்கட்டளை நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியாகப் பண பரிவர்த்தனை நடந்திருக்க, சந்தேகம் வலுத்தது. பேரிடர் காலத்திற்கென இவ்வளவு நிதியுதவி வழங்குவார்களா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட, பின்னணியில் ஒளிந்திருந்த பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, வசமாக மாட்டிக்கொண்டது.
இதுமட்டுமல்ல, சில இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது தொண்டு நிறுவனங்களின் நிதியை, பயங்கரவாத சக்திகளுக்குத் தாரை வார்த்துள்ளன. காசா, காஷ்மீர், ரோகிங்கியா உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவதாக நிதியை வசூலித்துவிட்டு, அதனை அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ், ஹமாஸ் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு வாரி வாரி வழங்கியுள்ளன.
அப்பாவி மக்களுக்கு உதவி புரிவதாக வேஷமிட்டு, பயங்கரவாத சக்திகளுக்குத் துணைபோன தொண்டு நிறுவனங்களின் உண்மைமுகம் உலகிற்கு தெரியவந்திருந்தாலும், இந்த விவகாரத்தில் பலத்த அடி வாங்கியது பாகிஸ்தான் தான். இந்தியா என்றாலே போதும் வரிந்து கட்டிக்கொண்டு, சதி வேலையில் ஈடுபடும் பாகிஸ்தான், திருந்தாத ஜென்மம் என்பதையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறது.