கன்னியாகுமரியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டிருந்த கல் மண்டபம், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் சுமார் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பகவதி அம்மன் கோயில் முன் அமைந்துள்ள கன்னியம்பலம் என்ற கல் மண்டபம், அறநிலையத்துறையால் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டு இருந்தது.
வணிக நோக்கத்திற்காக இந்த மண்டபத்தில் வாயில்களை அடைத்துக் கடைகளுக்கு வாடகைக்கு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்துக் கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 48 கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனிடையே தமிழ் ஜனம் தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்டு, இந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
வணிக நோக்கத்திற்காக அடைக்கப்பட்ட கல் மண்டபத்தைத் திறக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து கடைகளை அகற்றிய அதிகாரிகள், ஜேசிபி மூலம் சுவர்களை இடித்துக் கல் மண்டபத்தை மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தனர்.