அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமான பணி முடக்கம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவையும் விட்டு வைக்கவில்லை. நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
இந்தியாவில் மார்ச் 31ஆம் தேதி நிதியாண்டு முடிவதைப் போல், அமெரிக்காவில் செப்டம்பர் 30-ஆம் தேதிதான் நிதியாண்டு முடிவடையும். அக்டோபர் ஒன்றாம் தேதி புதிய நிதியாண்டு தொடங்கும். ஆண்டுதோறும் புதிய நிதியாண்டுக்கான நிதி மசோதா வழக்கமாகச் செப்டம்பர் 30ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் ஆகிய இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப் படும்.
ஒருவேளை நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற்றப்படவில்லை எனில், அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும். அதன் விளைவாக, அத்தியாவசியமற்ற அரசுச் சேவைகள் மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ராணுவம், எல்லைப் பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அலுவலகம், சுகாதாரம் போன்ற அத்தியாவசிய துறையின் பணியாளர்கள் பணி முடக்கத்தின் போதும் வழக்கம் போல் செயல்படுவார்கள்.
ஆனால் அவர்களுக்குப் பணி முடக்க காலத்தில் சம்பளம் வழங்கப்படாது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த இந்த ஆண்டுக்கான நிதி மசோதா இருஅவைகளிலும் நிறைவேறவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாததால், அத்தியாவசியம் இல்லாத பல அரசுத் துறைகள் மூடப்பட்டுள்ளன.
சம்பளம் கொடுக்க முடியாததால், சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது மொத்த அரசு ஊழியர்களில் சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக, நாசாவும் பணிமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நாசா இணையதளத்தில், மறு அறிவிப்பு வரும் வரை நிறுவனம் “மூடப்பட்டுள்ளது” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் அத்தியாவசிய ஊழியர்கள் மட்டுமே நாசாவில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கான பணி, தற்போது விண்ணில் இயங்கிக் கொண்டிருக்கும் விண்கலங்களைக் கண்காணிக்கும் பணி, சிறிய மற்றும் பெரிய செயற்கைக்கோள்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளை மட்டும் நாசா மேற்கொண்டு வருகிறது.
மற்ற விண்வெளி அறிவியல் ஆராய்ச்சி முதல் பொதுமக்கள் தொடர்புவரை அத்தியாவசியமற்ற அனைத்து அன்றாட பணிகளும் பெரும்பாலான நாசாவின் திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாசா நிதியுதவியால் ஆதரிக்கப்படும் ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் சந்திர ஆய்வு மற்றும் செவ்வாய் கிரக பயணங்கள் போன்ற எதிர்கால இலட்சிய விண்வெளி பயணங்களுக்கான திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், நாசாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களில், 15,000க்கும் மேற்பட்டோருக்கு ஊதியம் இல்லாத கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பணி முடக்கம் நீடித்தால், நாசாவிலும் அதிகளவிலான பணிநீக்கம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
அதிபர் ட்ரம்ப்பின் முதல் ஆட்சிக் காலத்திலும் இதுபோன்ற பணி முடக்கம் ஏற்பட்டுள்ளது. அது 38 நாட்கள் வரை நீடித்தது. பணி முடக்கம் நீடிக்கும் ஒவ்வொரு 7 நாட்களுக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 0.2 சதவீதம் சரியும் என்று கணிக்கப்பட்டுள்ளது.