தலை மற்றும் கழுத்து பகுதியில் ஏற்படக்கூடிய புற்றுநோயைப் புதிய ரத்த பரிசோதனைமூலம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் என்ற தகவல் மருத்துவ உலகில் புதிய அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புற்றுநோய் பரவலை குறைக்க முடியும் என்று கூறுகின்றார்கள் ஆராய்ச்சியாளர்கள்… அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.
அமெரிக்காவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு HPV வைரஸே 70 சதவிகித காரணமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்தான் பொதுவான புற்றுநோய்க்கும் காரணமாகிறது… எனினும் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் ஏற்படும் புற்றுநோய்களுக்கான ஸ்கிரீனிங் சோதனை எதுவும் இல்லை என்றே கூறப்படுகிறது.
இந்தப் பிரச்னைக்கு முடிவுக்கட்ட, அறிகுறிகள் தென்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தலை, கழுத்து புற்றுநோய்களைக் கண்டறிய உதவும் புதிய இரத்த பரிசோதனையை உருவாக்கியிருக்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.
HPV-DeepSeek எனப்படும் ஒரு புதிய திரவ பயாப்ஸி சோதனையை உருவாக்கியிருக்கும் அவர்கள், தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களை அறிகுறிகள் தெரிவதற்கு முன்பே கண்டறிய முடியும் என்கிறார்கள்.
புற்றுநோய்களை முன்கூட்டியே அறிவதன் மூலம், குறைவான அல்லது தீவிர சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் புற்றுநோயிலிருந்து விடுபடலாம் என்று கூறும் Harvard-affiliated Mass General Brigham ஆராய்ச்சியாளர்கள், தங்களது கண்டுபிடிப்பை Journal of the National Cancer Institute இதழில் வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் புற்றுநோய் அறிகுறியற்ற நபர்களிடம் HPV தொடர்புடைய புற்றுநோய்களைத் துல்லியமாக கண்டறிய முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கையூட்டுகிறார்கள்… புற்றுநோயின் அறிகுறிகளுடன் நோயாளிகள் மருத்துவமனைகளுக்குள் நுழையும் தருணத்தில், அவர்களுக்குக் குறிப்பிடத் தக்க, வாழ்நாள் முழுவதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
HPV-DeepSeek போன்ற கருவிகள் இந்தப் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிய உதவுவதோடு, இறுதியில் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நோயறிதலுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை HPV-DeepSeek கருவிமூலம் ஆய்வுக்கு உட்படுத்தியபோது, 28 புற்றுநோய்களில் 27 புற்றுநோய்களைத் துல்லியமாகக் காட்டியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கண்டுபிடிப்பு பரவலாக நடைமுறைக்கு வரும்பட்சத்தில், புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்று நம்பலாம்.