உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவின் ஆயுதங்களில் மேற்கத்திய நாடுகள் விநியோகித்த பொருட்களின் பயன்பாடு இருப்பதாக, அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டி உள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளைக் கடந்து நீடிக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு சர்வதேச சமூகம் சரியான பதிலடி கொடுக்காததால் தாக்குதலைப் புதின் தீவிரப்படுத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
ரஷ்யா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி வருவதற்கு மேற்கத்திய நாடுகளே காரணமென்றும் விமர்சித்தார். ரஷ்யாவின் ஆயுதங்களில் மேற்கத்திய நாடுகள் விநியோகித்த பொருட்களின் பயன்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏறக்குறைய 500 டிரோன்களில் ஒரு லட்சம் வெளிநாட்டு தயாரிப்புப் பாகங்கள் உள்ளதாகவும், அமெரிக்கா, சீனா, தைவான், இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவற்றை உற்பத்தி செய்துள்ளதாகவும் கூறிய ஜெலன்ஸ்கி, இவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.