டாடா அறக்கட்டளை தலைவராக இருந்த ரத்தன் டாடா இருந்த காலத்தில், டாடா சன்ஸ் குழுமத்துடன் இணக்கமான சூழல் இருந்தது. அவரது மறைவுக்கு பின்னர், டாடா அறக்கட்டளையில் வெடித்த அதிகார மோதல், தற்போது பூதாகரமாகியுள்ளது. அதைப் பற்றித் தற்போது பார்க்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான டாடா குழுமம், உப்பு முதல் விமானங்கள் வரை பல்வேறு வகையான தொழில்களை மேற்கொண்டு வருகிறது. டாடா குழுமத்தின் மதிப்பு 27 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அக்குழுமத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மோதல் வெடித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவிகித பங்குகளை சொந்தமாகக் கொண்டு, நாட்டின் மதிப்புமிக்க நிறுவனமாக டாடா டிரஸ்ட்ஸ் செல்வாக்கை பெற்றுள்ளது. தற்போது இரண்டு பிரிவு அறங்காவலர்களுக்கு இடையேயான அதிகார மோதல் காரணமாக டாடா டிரஸ்ட்ஸ் வாரியம் வரும் 10ம் தேதி கூடவுள்ளது.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின்னர், 2024 அக்டோபர் 11ம் தேதியன்று டாடா டிரஸ்ட்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார், அவரது சகோதரரான நோயல் டாடா… அப்போது முதல் டாடாஸ் சன்ஸ் குழுமத்தில், டாடா டிரஸ்ட்டால் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர்கள் வழங்கும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாதது குறித்து அறங்காவலர்கள் குழு அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நோயல் டாடாவால், ரத்தன் டாடா போன்று அதிகாரத்தை ஒருங்கிணைக்க முடியவில்லை என்றும், சக அறங்காவலர்களிடம் இருந்து அதிருப்தியையும், விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. குறிப்பாக அறங்காவலர்களிடம் கலந்து ஆலோசிக்காமல், நோயல் நேரடியாக முடிவெடுப்பது டாடா டிரஸ்ட்ஸ் வாரியத்திற்குள் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடுகளின் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், அண்மையில் மும்பையில் உள்ள தாஜ் சேம்பர்ஸில் அறங்காவலர்களை சந்தித்து விரிவாக ஆலோசித்ததாக அறியப்படுகிறது. இந்தப் பின்னணியில், டாடா டிரஸ்ட்ஸ் வாரியம் அக்டோபர் 10 ஆம் தேதி கூடுகிறது.
அதில் நிர்வாகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பங்குச் சந்தைப் தொடர்பான விவகாரத்தில் அறங்காவல் குழுவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. டாடா அறக்கட்டளைகளின் ஒருங்கிணைப்பு நீண்ட காலமாக டாடா குழுமத்தின் ஸ்திரத்தன்மைக்கு அடித்தளமாக இருந்து வருகிறது.
இதில் சிறிதளவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், குழுவில் உள்ள 26 பட்டியலிடப்பட்ட நிறுவனங்களையும் பாதிக்கும் என்ற வாதங்களும் எழாமல் இல்லை… ஒழுங்குமுறை கோரிக்கைகள், குழு உத்தி மற்றும் குடும்ப உறவுகளைச் சமநிலைப்படுத்தும் ஒரு ஒத்திசைவான நிலைப்பாட்டைச் சுற்றி நோயல் டாடா, அறங்காவலர்களை ஒன்றிணைக்க முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்படும் நிலையில், அதற்கான விடை விரைவில் தெரியவரும்.