கோடீஸ்வரர் ஒருவர் சலிக்காமல் துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறது பலரையும் வியக்க வைக்கிறது. 58 வயதான அந்தக் கோடீஸ்வரர் யார்…. என்பதை தற்போது பார்க்கலாம்.
ஜப்பானின் டோக்கியோ நகரைச் சேர்ந்த 56 வயதான அந்த நபர்தான் கொய்சி மாட்சுபாரா… 7 வாடகை வீடுகள், முதலீடுகள்மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் ஈட்டும் கொய்சி மாட்சுபாரா, அதனை சந்தோஷமாகச் செலவு செய்து ஓய்வெடுக்காமல், சாதாரணமாகவும், சலிக்காமலும் சாலையைச் சுத்தம் செய்து வருகிறார். வாடகை வீடுகள், பங்குகள், பரஸ்பர முதலீட்டுத் திட்டங்கள் மூலம் வருமானத்தை ஈட்டும் அவர், தனது குடியிருப்பில் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.
வாழக்கையில், சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க மாட்சுபாரா துப்புரவுப் பணியாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருவதாகத் தி கோல்ட் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. பகுதி நேரமாகப் பொது இடங்களை சுத்தம் செய்வது, குடியிருப்பு கட்டடங்களில் அடிப்படை பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது என அவர் மாதம் 60 ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.
எனினும் இது டோக்கியோவின் சராசரி சம்பளமான 2 லட்சம் ரூபாயைவிடக் குறைவுதான். சிறுவயதிலேயே சிக்கனமாக வாழக் கற்றுக்கொண்ட மாட்சுபாரா, மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், தொழிற்சாலையில் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாகப் பெற்றார்.
விடா முயற்சியுடன் 18 லட்சம் சேமித்த அவர், அந்தப் பணத்தை முதல் அபார்ட்மென்ட் வாங்கப் பயன்படுத்தினார். படிப்படியாகத் தனது சொத்துகளையும் அதிகப்படுத்தினார். இன்றோ மட்சுபாரா ஒரு சிறிய வாடகை வீட்டில் இருக்கிறார், தனக்கான உணவைத் தானே சமைத்துக் கொள்கிறார். அவர் 10 ஆண்டுகளுக்கும்மேலாகப் புதிய ஆடைகளை வாங்கவில்லை என்பதுதான் ஆச்சர்யம்.
காலையில் எழுந்து, சுத்தம் செய்து அனைத்தையும் நேர்த்தியாகச் செய்வது தனக்கு பிடிக்கும் என்று கூறும் மாட்சுபாரா, துப்புரவுப் பணி என்பதை பணத்தை பற்றியது அல்ல, மாறாக ஒருவழக்கத்தைப் பழக்காக்கிக் கொள்வது, உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பதை பற்றியது என்று கூறுகிறார் புன்னகையுடன்.
நான் ஒவ்வொரு நாளும் ஏதாவது செய்ய வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நானே சிந்திக்க வேண்டும் என்று நம்புகிறேன் என்பதுதான் இந்தக் கோடீஸ்வர துப்புரவு தொழிலாளியின் பணிவான வார்த்தை… சிக்கனத்திற்கும், எளிமைக்கும், யதார்த்தமான வாழ்வியலுக்கும் சொந்தக்காரரான மாட்சுபாரா மற்றவர்களுக்கு முன் உதாரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.