ஆலங்குளம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கோயிலில் விவசாயம், உழவுப்பணி, பீடி சுற்றுதல் உள்ளிட்ட தொழில்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டு வருகின்றன. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தொடக்க காலத்தில் ஓலைகுடிசையில் இருந்து வந்த இந்தக் கோயில், பின்னர் சிறிய கல் கட்டத்திற்கு மாறியது. மாரியம்மன் கோயிலைப் பெரியளவில் கட்ட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது.
மேலும், தென்காசி காசி விஸ்வநாதர், நெல்லை நெல்லையப்பர் கோயில்களில் உள்ளதை போன்று கோபுரம் அமைக்க வேண்டும் என்பதும் அவர்களது விருப்பமாக இருந்தது. இதற்காக, ஊர் மக்கள் அனைவரும் இணைந்து நிதி திரட்டி மாரியம்மன் கோயிலை விரிவுப்படுத்தி கட்டும் பணியைத் தொடங்கியுள்ளனர்.
கோவில் திருப்பணிக்காக ஆந்திராவில் இருந்து கற்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. காரைக்குடியை சேர்ந்த சிற்பி சரவணன் தலைமையில் சுமார் 25 பேர் கோயில் கட்டுமான பணியில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
ஆலங்குளம் பகுதியில் உள்ள மாரியம்மனை வழிபடும் மக்கள் பெரும்பாலும் விவசாயம், பீடி சுற்றுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். எனவே, அந்த தொழில்களை கோயிலில் சிற்பங்களாக செதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப, தாங்கள் சார்ந்துள்ள தொழிலை இப்பகுதி மக்கள் சிற்பமாக வடித்து வருவது, தென்காசி மாவட்டத்தில் உள்ள பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
இப்பகுதியில், 2000 வரிதாரர்கள் இருக்கும் நிலையில், பீடி சுற்றும் தொழிலில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியைக் கோயில் பணிக்கு பெண்கள் வழங்கி வருவது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
















