சில மாதங்களுக்கு முன் அபுதாபி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஒரு நபரின் வீடியோ சமூக வலைத் தளங்களில் தற்போது வைரலாகி சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. யார் அந்த நபர்? அவரின் பின்னணி என்ன? ஏன் அவரின் வருகை உலகையே வியக்க வைத்தது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகமெங்கும் ஜனநாயகம் ஆட்சி செய்கிறது என்றாலும், எல்லா மன்னர்களும் தங்கள் அதிகாரத்தை இழந்ததில்லை. தாய்லாந்து,சவுதி அரேபியா, புரூனே என இன்னமும் அரச குடும்பத்தினர் ஆட்சி செய்யும் நாடுகள் உலகில் உள்ளன. அப்படியான ஒரு தேசம் தான் சுவாசிலாந்து. ஆப்பிரிக்காவின் கடைசி முழுமையான முடியாட்சி தேசமாகும்.
தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தச் சிறிய நாட்டை 1986ம் ஆண்டு முதல் மூன்றாம் மன்னர் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 18 வயதில் மன்னரான எம்ஸ்வதியின் இயற்பெயர் மகோசெடிவ் டிலாமினி என்பதாகும். ஆப்பிரிக்க மொழியில் அதற்கு “நாடுகளின் ராஜா” என்று பொருளாகும்.
இவரின் தந்தை சோபுசா தான் 82 ஆண்டுகள் இந்நாட்டை ஆட்சி புரிந்தார். 82 வயதில் 125க்கும் மேற்பட்ட மனைவிகளுடனும், 210க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் கிட்டத்தட்ட 1,000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளும் சோபுசா தானுக்கு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை வழியில் நடக்கும் மகன் என்பது போல் மன்னர் எம்ஸ்வதிக்கு சட்டப்பூர்வமாக 15 மனைவிகள் உள்ளனர்.
2006ம் ஆண்டு, ஒரு பெண்ணைக் கடத்தி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என்று சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்ததை அடுத்துஅந்தப் பெண்ணுக்கு நாட்டின் ராணி என்ற அந்தஸ்தை வழங்கியுள்ளார். ஒரு மனைவிக்கு மட்டும் ராணியின் அங்கீகாரத்தை வழங்கியுள்ள மன்னர், தான் திருமணம் செய்து கொண்ட மற்ற பெண்களை எல்லாம் அந்தப்புரநாயகிகளாக வைத்திருக்கிறார்.
சமீபத்தில் தன்னை விட 35 வயது வித்தியாசம் உடைய ஒரு பெண்ணை 16வது மனைவியாக ஆக்கிக் கொண்டார். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இவரின் 16வது மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இதுவரை மன்னருக்கு 35 குழந்தைகள் உள்ளனர். இவர் மனைவியைத் தேர்ந்தெடுக்கும் விதமே புதுமையானது.
முதல் இரண்டு மனைவியர்களும் ஒரு சிறப்பு சபையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பாரம்பரியத்தின் படி, மன்னரின் முதல் மனைவி மட்செபுலா குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், இரண்டாவது மனைவி மோட்சா குலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அதன்பிறகு, மன்னருக்கு மற்ற குலங்களிலிருந்து மனைவிகளைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உள்ளது. இந்நாட்டில் குறைந்தது 17 குலங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் பாரம்பரிய கற்பு அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
மன்னரின் அரண்மனையில் நடைபெறும் திருமணமாகாத பெண்களின் அணிவகுப்பிலிருந்து புதிய மணப்பெண்களை மன்னர் தேர்ந்தெடுக்கிறார். ஆயிரக்கணக்கான திருமணமாகாத பெண்கள் பங்கேற்கும் கற்பு அணிவகுப்பில் இளம் பெண்கள் பங்கேற்பது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. 1.3 மில்லியன் மக்கள் வசிக்கும் சுவாசிலாந்தின் பெயரை 2018 ஆம் ஆண்டில், “சுவாசிகளின் நிலம்” என்று பொருள்படும் வகையில் “எஸ்வதினி இராஜ்ஜியம்” என்று அறிவித்தார். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து நாடு சுதந்திரம் அடைந்த 50வது ஆண்டு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
என்றாலும், உலகின் பிற நாடுகளால் இந்தப் பெயர் மாற்றம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உலகில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் இருக்கும் இந்நாட்டின் மக்கள் தொகையில் சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் உள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒரு டாலர் கூடக் கிடைக்காமல் வறுமையில் வாடும் நிலையில் மன்னரின் ஓராண்டு வீட்டு பட்ஜெட்டுக்காக 61 மில்லியன் அமெரிக்க டாலரை அந்நாட்டு நாடாளுமன்றம் ஒதுக்கியது. 500,000 அமெரிக்க டாலர் மதிப்புடைய மேபேக் உட்பட ஆடம்பர கார்களை மன்னர் பயன்படுத்துவது குறித்த கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து, தனது கார்களின் புகைப்படங்களை வெளியிடுவதற்குத் தடை செய்தார். அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கும் தடை விதித்தார்.
அடிப்படைப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், 2021 ஆம் ஆண்டில் வேலையின்மை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், நாட்டில் ரியல் எஸ்டேட், சுற்றுலா, விவசாயம், தொலைத்தொடர்பு மற்றும் வனவியல் உள்ளிட்ட துறைகளில் ஈடுபடும் பெரும் நிறுவனங்களில் அதிகமான பங்குகள் மன்னரிடம் உள்ளது.
உலகின் 15 பணக்கார மன்னர்களின் பட்டியலில், இடம்பெற்ற மன்னர் எம்ஸ்வதியின் நிகர சொத்து மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாகும் என்று FORBES தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் மூன்றாம் எம்ஸ்வதி மன்னர் அபுதாபிக்கு வரும் பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சுவாசிலாந்து மன்னர் 15 மனைவிகள்,35 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்களுடன் அபுதாபிக்கு வந்தார் என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோ ஆப்பிரிக்க மன்னரின் ஆடம்பரமான வாழ்க்கை முறையைப் பட்டவர்த்தனமாக எடுத்துக் காட்டியது. புலி அச்சு பொறித்த பழங்குடியின பாரம்பரிய உடையை மன்னர் அணிந்திருந்தாலும் அவரின் மனைவிகள் அனைவரும் ஆடம்பரமான நவ நாகரீக உடைகளை அணிந்திருந்தனர்.
அதிக எண்ணிக்கையில் வந்த மன்னரின் பரிவாரங்கள் இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும். நிலைமையைச் சமாளிக்க, அபுதாபி விமான நிலையத்தின் மூன்று முனையங்களையும் தற்காலிகமாக அபுதாபி அரசு மூடியதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதும், நெட்டிசன்கள் மன்னரின் ஆடம்பரத்தைப் பார்த்துக் கடும் விமர்சனங்களை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர்.
















