வளர்ந்த நாடாக அறியப்படும் அமெரிக்காவில் மோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ள குஜராத்திகள் இரண்டு தனித்தனி சம்பவங்களில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..மோட்டல் தொழிலில் உள்ள குஜராத்திகள் குறிவைக்கப்படுவது ஏன்? என்பதை தற்போது பார்க்கலாம்.
குஜராத்தி சமூகத்தினர், குறிப்பாகப் படேல்கள், அமெரிக்கா முழுவதும் வணிகங்களைச் சொந்தமாக வைத்திருப்பதற்கும், இலாபகரமாக நடத்துவதற்கும் பெயர் பெற்றவர்களாக அறியப்படுகிறார்கள்… ஆனால் வணிக நிறுவனங்களை நடத்தும்போது தாக்குதல்களுக்கு ஆளாகும் வாய்ப்பு சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.
பென்சில்வேனியா மற்றும் வடக்கு கரோலினாவில் நடந்த சம்பவங்களில் மோட்டல் தொழிலில் ஈடுபட்டுவந்த மூன்று குஜராத்திகள் அண்மையில் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் மோட்டல் தொழிலில் ஈடுபட்டு வந்த குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களான 7 பேர் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு வினாக்களையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் 60 சதவிகித மோட்டல் தொழிலைக் குஜராத்திகள் நடத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து அரங்கேறியிருக்கும் கொலை சம்பவங்கள் மோட்டல் தொழிலை ஆபத்தானதாக மாற்றியிருக்கிறது. குஜராத்திகள் மீதான பெரும்பாலான தாக்குதல்கள், அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் மோட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மளிகை கடைகளில் போன்றவற்றில் நடப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.
குறிப்பாக மோட்டல்கள், பெட்ரோல் நிலையங்கள் பெரும்பாலும் நெடுஞ்சாலைகளிலோ அல்லது நகரத்தில் இருந்து விலகி வெகு தொலைவிலோ அமைந்திருப்பதுதான் குற்றங்கள் நடக்கக் காரணம் என்று நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது. போதைப்பொருள் விற்பனை முதல் விபச்சாரம், கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு இதுபோன்ற மோட்டல்கள் இலக்காகி விடுவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
மோட்டல்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மிகவும் வெற்றிகரமான வணிகங்களாகும், அங்குப் பணப்புழக்கம் சீராக இருக்கும் – 1960களில் இருந்து குஜராத்தி வணிக உரிமையாளர்கள் அமெரிக்காவில் அதிவேகமாக வளர்ந்ததற்கு இதுவே காரணம். மற்ற விருந்தோம்பல் துறைகளைப் போலவே மோட்டல்களும் உழைப்பு மிகுந்தவையே.
பல தசாப்தங்களாக, படேல்கள் ஒரு மோட்டலைக் கைப்பற்றி, குடும்ப உறுப்பினர்களைக் கொண்டே தொழிலை நடத்தினர். மோட்டலில் இருந்து சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு வணிகத்தை விரிவுபடுத்தினர். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வலுவான சமூக ஆதரவாளர்களாக அறியப்பட்ட குஜராத்திகள், பல ஆண்டுகளாக அமெரிக்காவில் ஒரு பரந்த வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளனர்.
பெரும்பாலும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்குப் பதிலாகத் தங்கள் சம்பாத்தியத்தை மீண்டும் முதலீடு செய்து சக சமூக உறுப்பினர்களை ஆதரிக்கின்றனர். இது தலைமுறை தலைமுறையாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இன்று, அமெரிக்க மக்கள்தொகையில் ஒரு சதவிகிதம் மட்டுமே குஜராத்திகள் இருந்தபோதிலும், அமெரிக்காவின் 60 சதவிகிதம் மோட்டல்களை அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள் என நியூயார்க்கின் டிரிபெகா விழாவில் திரையிடப்பட்ட தி படேல் மோட்டல் ஸ்டோரி என்ற குறும்படத்தின் இயக்குனர் அமர் ஷா கூறுகிறார்.
குறிப்பாகக் குஜராத்தி குடியேறிகள், குறிப்பாகப் படேல்கள், அமெரிக்காவின் மோட்டல் சாம்ராஜ்யத்தை எவ்வாறு கட்டியெழுப்பினார்கள் என்பதை இந்தக் குறும்படம் கூறுவதோடு, அவர்களின் மன உறுதி, குடும்ப வலைப்பின்னல்கள் மற்றும் அவர்களின் வெற்றிக்குப் பின்னால் உள்ள போராட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. 1990களில், அமெரிக்காவின் மோட்டல் துறையில் குஜராத்திகளின் ஆதிக்கம் 50 சதவிகிதமாக வளர்ந்தது.
1999 ஆம் ஆண்டில், நியூயார்க் டைம்ஸ் “ஒரு படேல் மோட்டல் கார்டெல்?” என்ற கட்டுரையில் இதை முன்னிலைப்படுத்தியது. ஆனால் விருந்தோம்பல் துறையில் குஜராத்தி சமூகத்தின் ஆதிக்கத்திற்கான அடித்தளம் 1930-களின் நடுப்பகுதியிலேயே போடப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இந்தியர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களின் பிதாமகன் என்று புகழப்படும் காஞ்சி மஞ்சு தேசாய், 1934 ஆம் ஆண்டு டிரினிடாட்டில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவராக அமெரிக்காவிற்கு வந்தவர் என்றும், அமெரிக்காவின் முதல் படேல் ஹோட்டல் உரிமையாளராக ஆனார் என்றும், “சூரத் டு சான் பிரான்சிஸ்கோ: ஹவ் தி பட்டேல்ஸ் ஃப்ரம் குஜராத்” என்ற தனது புத்தகத்தில் ஆவணப்படுத்தியிருக்கிறார் பத்திரிகையாளர் மகேந்திர கே தோஷி.
சமீபத்திய ஆண்டுகளில், இந்திய எதிர்ப்பு உணர்வுகள் அதிகரித்து வருவதும், அமெரிக்க நகரங்களில். மோட்டல்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை சொந்தமாக்குவதில் குஜராத்திகள் காட்டும் முனைப்பு போன்றவை அவர்களை இன விரோதத்திற்கு எளிதான இலக்குகளாக மாற்றுகின்றன.
இது மட்டுமின்றி, அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள் என்ற அமெரிக்க அதிபரின் பிரச்சாரம், புலம்பெயர்ந்தோர்,குறிப்பாகத் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள் மீதான விரோதப் போக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் வேலையை பறிப்பவர்களாகக் கருதப்படும் இந்தியர்கள், இனவெறி, நாசவேலை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை அதிகளவில் எதிர்கொள்கின்றனர்.
மோட்டல்களை நடத்துவதில் குஜராத்திகளின் ஆதிக்கம், இந்தியர்கள் மீதான வெறுப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இந்திய வம்சாவளியினர் மீதான தாக்குதலை அதிகரித்திருப்பதோடு, அமெரிக்கா பாதுகாப்பானதா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
















