தருமபுரம் ஆதினம் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்த காரணிகளுக்காக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்திருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.
மயிலாடுதுறை இலவச மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தை இடிக்கும் திமுக அரசின் முயற்சி, பாஜகவின் அழுத்தம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டு வந்தது என கூறியுள்ள நயினார் நாகேந்திரன், இப்போது மயிலாடுதுறை நகராட்சியின் வழியே இலவச மகப்பேறு மருத்துவமனை கட்டடத்தை இடிக்க திமுக அரசு மீண்டும் முயல்வதை அறிய முடிகிறது என தெரிவித்துள்ளார்.
தருமை ஆதீனத்தின் குடையின் கீழ் இயங்கிய மகப்பேறு மருத்துவமனை இடத்தை அதே சேவைக்காகவே பயன்பாட்டில் வைக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள நயினார் நாகேந்திரன், தருமை ஆதீனகர்த்தரின் கருத்துக்கு மாறாக திமுக அரசு ஏதேனும் செய்ய நினைத்தால், அதனை தமிழக பாஜக வன்மையாக கண்டிப்பதுடன், மாபெரும் அறவழிப் போராட்டத்தை முன்னெடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.