அமெரிக்காவில் பெர்ஃபியூமை போதைப்பொருள் எனக் கருதி தவறுதலாகக் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நாடு கடத்தப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். போலீசார் அவரைக் கைது செய்தது எப்படி, பின்னணி என்பது குறித்து பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஆர்கன்சாஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கபில் ரகு என்பவர், அமெரிக்க குடியுரிமை பெற்ற பெண்ணை மணந்து நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மே மூன்றாம் தேதி அப்படியொரு சம்பவம் நடக்கும் என்று கபில் ரகு எதிர்பார்க்கவில்லை.
போக்குவரத்து விதிமீறலுக்காகப் பெண்டன் போலீசாரிடம் சிக்கியதுதான் தாமதம்… அவரது காரில் ஒபியம் என்ற பெயரிடப்பட்ட பெர்ஃபியூமை கைப்பற்றிய போலீசார், போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி சந்தேகத்தின் அடிப்படையில் கபில் ரகுவை அதிரடியாகக் கைது செய்தினர்.
ஒபியம் வைத்திருந்ததாகக் கைது செய்யப்பட்டபோது, அது ஒபியம் இல்லை பெர்ஃபியூம்தான் என்று ரகு விளக்கியபோதும் போலீசார் அதனை நம்பவில்லை. மூன்று நாட்கள் சலைன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்க தடுப்பு மையத்தில் 30 நாட்கள் காவலில் வைக்கப்பட்டார் கபில் ரகு.
போதைப்பொருள் குற்றச்சாட்டு அவர் மீது இருக்க, குடியேற்ற ஆவணங்களில் ஒரு சிக்கலைக் குறிப்பிட்டு விசாவை அதிகாரிகள் ரத்து செய்திருக்கிறார்கள். மே 20ம் தேதி மாவட்ட நீதிமன்றத்தால் போதைப்பொருள் குற்றச்சாட்டு கைவிடப்பட்ட போதிலும், ரகுவின் தடுப்புக்காவலின்போது அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது, அமெரிக்காவில் அவரது சட்டப்பூர்வ அந்தஸ்தை கடுமையாகப் பாதித்தது.
ரகு வைத்திருந்தது ஒபியம் இல்லை, சாதாரண பெர்ஃபியூம்தான் என்று உறுதிபடுத்தப்பட்ட பின்னரும், அவரது விசா ரத்து செய்யப்பட்டிருப்பது நிர்வாகப் பிழை என்று அவரது வழக்கறிஞர் கூறுகிறார். தற்பாது நாடுகடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ள கபில் ரகு, அங்கு வேலை செய்ய முடியாததால், கடுமையான நிதி நெருக்கடி மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கிறார்… இந்த நிலையில், தனது விசா பிரச்னைக்குத் தீர்வுகாணும் முயற்சியில் கபில் ரகு ஈடுபட்டிருக்கிறார். சட்டக் கட்டணங்கள் அதிகரிப்பு, நிதியுதவி பெற முடியாத சூழல் போன்றவை ரகுவை கடினமாகச் சூழலுக்குத் தள்ளியிருக்கிறது. ICE-ஐ மேற்பார்வையிடும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, இந்த வழக்குகுறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டினருக்கு சட்ட மற்றும் தூதரக ஆதரவை உறுதி செய்யும் வியன்னா மாநாட்டு விதிமுறையின் கீழ், இந்திய துணைத் தூதரகத்திற்கு அறிவிக்காமல் பெண்டன் காவல்துறை சட்டம் மற்றும் கொள்கை இரண்டையும் மீறியதாக ரகுவின் வழக்கறிஞர் கூறியதாகத் தி சலைன் கூரியர் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தர்மசங்கடமான நிலைமை குடும்பத்தை மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது என்று ரகுவின் மனைவி ஆல்லி மேஸ் கூறியிருக்கிறார். காலம் கடந்து கொண்டிருக்கும் நிலையில், கபில் ரகுவுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே அனைவரது கேள்வி.