மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊராட்சி குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதால் பட்டியல் சமூக மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சிலர் மேல்நிலை தொட்டியைப் பார்த்தபோது அதில் மனிதக் கழிவு கலந்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியின் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனிதக் கழிவு கலந்த தண்ணீரால் 2 நாட்களாகக் குடிநீர் பயன்பாட்டை நிறுத்தி உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.