சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்.
தமிழக பாஜக சார்பில் வரும் 12ஆம் தேதி மாநில அளவில் பிரச்சாரம் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, சென்னை எழும்பர் ஆட்டோ நிறுத்தத்தில் உள்ள ஆட்டோக்களில், தமிழக பாஜக சார்பில், பிரச்சார ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. ‘தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்’ என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரில், பிரதமர் மோடி மற்றும் தமிழக பாஜக நிர்வாகிகளின் படங்கள் இடம்பெற்றுள்ளன.
மாநிலத்தில் பாஜக வளர்ச்சிப் பாதையில் செல்வதை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலச் செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி தலைவர் சதீஷ், பாஜக மாவட்ட, மண்டல நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த நயினார் நாகேந்திரன், வரும் 12ஆம் தேதி தொடங்கும் பாஜக மாநில பிரச்சாரத்தில் ஜெ.பி.நட்டாவுக்கு பதிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறினார். பாஜக மாநில பிரச்சாரத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் மாநகர போலீசார் அனுமதி வழங்கியுள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.