கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலக்கிணறு பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சத்துணவு சமையலராகப் பணிபுரியும் தங்கம்மாள் என்பவர் பணி முடிந்து வரும்போது காட்டெருமை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
இதனையடுத்து இரவு நேரமாகியதால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டுவர முடியாமல் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
பின்னர், இரவு முழுவதும் வலியால் துடித்துக் கொண்டிருந்த அவரை, காலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு தொட்டில் கட்டி போக்குவரத்து உள்ள இடத்திற்கு கொண்டு வந்தனர்.
அதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.