பிரபல இசைக் கலைஞர் ஜூபீன் கார்க்கின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு, அவரின் உறவினரும் அசாம் காவல்துறை துணை கண்காணிப்பாளருமான சந்தீபன் கார்க்கைக் கைது செய்துள்ளனர். ஜுபீன் கார்க்கின் மரண வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யபட்டுள்ளனர். அதனால், இந்த வழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்து வருகின்றன.
அசாம் மாநில கலாச்சார சின்னமாக விளங்கிய இசைகலைஞர் ஜூபீன் கார்க், அசாமில் மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாட்டிலும் இரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். வடகிழக்கு மாநிலங்களிலேயே மிக அதிக சம்பளம் வாங்கும் இசைக்கலைஞராக இருந்த ஜூபீன் கார்க், நேரடி இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் சென்று நடத்திவந்தார். அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிகளில் இதுவரை சுமார் 38,000 பாடல்களைப் பாடி அசாம் மக்களின் அன்புக்கு உரியவராக இருந்தார்.
கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி சிங்கப்பூரில் கடலில் ஸ்கூபா டைவிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிங்கப்பூரிலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடல் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.
அவரது உடல் அசாமில் மீண்டும் ஒரு முறை பிரேதப் பரிசோதனை செய்தபின், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஜூபீன் கார்க்கின் திடீர் மரணம் குறித்து சந்தேகங்களுக்கு விடை காண, எம். பி. குப்தா ஐபிஎஸ் தலைமையில் 10 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அமைத்துள்ளார்.
கூடுதலாக, கவுகாத்தி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு, ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக ஏதேனும் தகவல்கள் அல்லது வீடியோக்கள் வைத்திருப்பவர்கள் அதனை விசாரணை ஆணையத்தின் முன் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப் பட்டது. இந்த மரண வழக்கில், முதலில் ஜூபினின் நண்பரும் இசைக்கலைஞருமான சேகர் ஜோதி கோஸ்வாமி கைது செய்யப் பட்டார்.
அடுத்து வடகிழக்கு இந்தியா விழாவின் ஏற்பாட்டாளர் ஷ்யாம்கானு மஹந்தா மற்றும் ஜூபின் கார்க்கின் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் இணைப் பாடகர் அமிர்தப்ரவா மஹந்தா ஆகியோரும் கைது செய்யப் பட்டனர். ஜுபின் கார்க் மேலாளர் சித்தார்த் சர்மா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஷ்யாம் கனு மகந்தா இருவரும் இணைந்து அவருக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்துள்ள சேகர் ஜோதி கோஸ்வாமி, திறமையான நீச்சல் வீரரான ஜுபின் கார்க் நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் விசாரணையில் கூறியுள்ளார்.
மேலும், சிங்கப்பூரில் பான் பசுபிக் ஹோட்டலில் தங்கியிருந்தபோது சித்தார்த் சர்மாவின் நடத்தை சந்தேகத்திற்கிடமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், ஷ்யாம் கனு மகந்தா நிதி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர். முன்னாள் டிஜிபி பாஸ்கர் ஜோதி மஹந்தா மற்றும் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான நானி கோபால் மஹந்தாவின் தம்பிதான் இந்த ஷ்யாம் கனு மகந்தா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜூபின் கார்க்கின் உறவினரும் அசாம் காவல் துறை துணை கண்காணிப்பாளருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரில் ஜுபின் கார்க் நீரில் மூழ்கியதாகக் கூறப்படும் போது அந்தப் படகில் சந்தீபன் கார்க் இருந்ததாகக் கூறியுள்ள சிறப்பு புலனாய்வுத் துறை அந்தப் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன.
அசாம் கம்ரூப் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு காவல் துறை துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சந்தீபன் கார்க் கைது ஜூபின் கார்க் மரண வழக்கில் முக்கிய திருப்புமுனையாக அமைத்துள்ளது.
இதற்கிடையே ஜுபின் கார்க் மரணம் தொடர்பாக அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே, இந்த வழக்கை சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்றும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷ்யாம் கனு மகந்தா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.