ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தாவிட்டால், வேறுவிதமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனப் பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முத்தகி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ள முத்தகி, டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தானுக்கு எதிராகத் தலிபான் பயங்கரவாத குழுக்களை ஆப்கானிஸ்தான் தூண்டி விடுவதாகப் பாகிஸ்தான் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்தார்.
மேலும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பிராந்திய அமைதிக்கு உகந்ததல்ல எனச் சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் தங்களது சொந்தப் பிரச்னைகளுக்கு ஆப்கானிஸ்தான் மீது பழி போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஆப்கானிஸ்தான் உடனான எல்லை பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்க்க முடியும், வன்முறை அதற்குத் தீர்வல்ல என்றும், ஆப்கானிஸ்தானின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.