கல்லீரல் பாதிப்பால் உயிரிழந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உடலை மருத்துவர் செல்வகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பிரபல ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிக்கப்பட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, தன்னுடைய கணவரை காவல்துறை விஷம் வைத்துக் கொன்று விட்டதாகக் கூறி நாகேந்திரன் மனைவி விசாலாட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது கணவரின் உடலை தங்கள் தரப்பு மருத்துவர் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், நாகேந்திரன் உடலைக் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் செல்வகுமார் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
மேலும், பிரேத பரிசோதனை நடவடிக்கையை வீடியோ பதிவு செய்யவும், அதன் மாதிரிகளை பத்திரப்படுத்தித் தடயவியல்துறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.