காசா போர் நிறுத்தம் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவேன் எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அடுத்த அம்மச்சியாபுரத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட இடத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார்.
அப்போது அவரை சூழ்ந்த அப்பகுதி மக்கள், தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை அவரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் இந்த சம்பவத்தால் அவர்களுக்கு ஏற்படும் குடிநீர் பிரச்னைகள் குறித்தும் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தின் விசாரணை நிலை குறித்து காவல்துறையினரிடம் கேட்டறிந்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் சோழவந்தான் தொகுதி மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் பாதித்திருப்பதாகவும், ஆனால் அரசு இந்த சம்பவத்தை மூடி மறைக்க முயல்வதாகவும் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே வேங்கைவயல் பிரச்னை திமுக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய ஆர்.பி.உதயகுமார், அம்மச்சியாபுரத்தில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், காசா போர் நிறுத்தம் குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவேன் எனக்கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது சொந்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறார்? என கேள்வி எழுப்பினார்.