தீபாவளி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் செட்டிநாட்டு பலகாரங்கள் பிரசித்தி பெற்றவை. அதிலும் பலகாரங்கள் தயாரிப்பு பணியில் பெண்கள் மட்டுமே ஈடுபடுவதும் தனிச்சிறப்பாக இருக்கிறது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்….
தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகளுக்கு அடுத்து பலகாரங்களே முக்கிய இடம் வகிக்கின்றன. அதிலும் செட்டிநாடு பலகாரங்களுக்கு என்று தனி மவுசே உள்ளது.
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை கிராமமானது காரைக்குடிக்கு அடுத்தபடியாக நகரத்தார் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக உள்ளது.
இங்குச் செட்டிநாடு கட்டிட கலையின் அடிப்படையில் கட்டப்பட்ட நேர்த்தியான தெருக்களுடன் கூடிய கட்டிடங்களை ஏராளமாகக் காணலாம். அத்துடன் அவர்களின் பாரம்பரியம் மாறாத செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கப்படும் பணிகளும் இக்கிராமத்தில்தான் களைகட்டியுள்ளன.
தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளி பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் நகரத்தார் சமூக மக்கள் ஈடுபட்டுள்ளனர். அதிலும் பெண்களை மட்டுமே கொண்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
12 ஆண்டுகளுக்கும் மேலாகச் செட்டிநாடு பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் இவர்கள் தேன்குழல், அதிரசம், பால்முருக்கு, கைமுருக்கு, காரமுருக்கு, சீடை, கார சீடை, உப்பு சீடை, இனிப்பு சீடை, மனவல்லம், தட்டை, காராச்சேவு, ரிப்பன் சேவு, மிக்சர், லட்டு, பூந்தி, மைசூர்பாக், கடலை மாவுருண்டை என 17 வகையான பலகாரங்களை சுத்தமான நெய், எண்ணெய் உள்ளிட்டவை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கின்றனர்.
பாரம்பரிய சுவை மாறாமலும் பலகாரங்கள் சுடச்சுட ரெடியாகின்றன. பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் பெண்கள் மட்டுமே முழுமையாக ஈடுபட்டு வருவதால் வீடுகளில் தயார் செய்வதைபோலவே சுவை மற்றும் உடல் உபாதைகள் ஏற்படாத வண்ணம் அக்கறையுடன் தயாரிக்கப்படுவதாகக் கூறுகின்றனர் இப்பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள்.
தீபாவளிக்காக மட்டுமல்லாமல் வீட்டு விசேஷங்களுக்காகவும் பலகாரங்களை தயார் செய்வதால் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பலகாரங்களை வாங்கி செல்கின்றனர்.
வெளிநாடுகளில் இருக்கும் தங்களது சொந்தங்களுக்கும் இந்தப் பலகாரங்களை அனுப்பி வைக்கின்றனர். பெண்களால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்தச் செட்டிநாட்டு பலகாரங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை செட்டிநாட்டு பலகாரங்களுடன் கொண்டாட ஏராளமானோர் தயாராகி வருகின்றனர்.