அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமைதிக்காக அறிவிப்பக்கப்பட்ட நோபல் பரிசு தற்போது மோதலைக் கிளப்பி இருக்கிறது. விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.
2025-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்பது அமெரிக்க அதிபர் ட்ரம்பை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது. வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை நேரடியாக விமர்சித்துப் புகைச்சலை வெளிப்படுத்தி இருக்கிறது ட்ரம்பு தரப்பு.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் செங், அமைதிக்கான நோபல் பரிசு தேர்வில் அரசியல் விளையாடி இருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, சண்டைக்கு முடிவுக் கட்டி, மக்களைப் பாதுகாத்த ஒப்பற்ற மனிதரையா புறக்கணிக்கிறீர்கள் என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மலையையே அசைத்துப் பார்க்கும் குணம் கொண்டவராகவும், மனிதநேய பண்பாளராக இருக்கும் அதிபர் ட்ரம்புக்கு நிகர் எவரும் இல்லை என்றும் மரியா கொரினா மச்சாடோவை அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஆனால் நோபல் பரிசு பெற்ற மரியா கொரினா மச்சாடோவை பொறுத்த வரையில், அதிபர் ட்ரம்ப் மீது மிகுந்த மரியாதை கொண்டவராக இருக்கிறார். வெனிசுலாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த அதிபர் ட்ரம்ப் துணை நிற்கிறார் என ஒருமுறை, இருமுறையல்ல… பலமுறை பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
நடப்பாண்டில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூட, வெனிசுலாவுக்கு ஆதரவளிக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி எனத் தெரிவித்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் துணை நிற்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு காலமுழுக்க நன்றி கடன் பட்டிருப்பதாகவும் கூறினார்.
இதுமட்டுமல்ல, டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அதிபராகத் தேர்வானபோது கூட, மச்சாடோ மனமார்ந்த வாழ்த்து தெரிவித்தார். இப்படி ட்ரம்ப் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அமெரிக்க அரசு நிர்வாகத்தினர் கூறும் கருத்துகள் காயம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன.
இத்தனை ஆண்டுகள் காயத்திற்கு மருந்திட்டு வந்தவர்கள், ஒரு பரிசுக்காக இப்படி வசைபாடு தொடங்கிவிட்டார்களே என கவலை தெரிவிக்கின்றனர் மச்சாடோ ஆதரவாளர்கள்.