நியூசிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர், தனது பெயருடன் 2000க்கும் மேற்பட்ட பெயர்களை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்தில் உள்ள நூலகமொன்றில் லாரன்ஸ் வாட்கின்ஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்குப் பிறரைப் போல வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள சாதனைகளை பட்டியலிட்டு, தன்னால் என்ன சாதனையை செய்ய முடியும் என ஆராய்ந்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட யோசனையின் பேரில் தனது இயற்பெயருடன் ஏராளமான பெயர்களை சேர்த்து, மிக நீளமான பெயரை கொண்டவர் எனும் கின்னஸ் சாதனையை படைக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி, தனது பெயரின் ஊடே 2250-க்கும் மேற்பட்ட நடுப்பெயர்களை சட்டப்பூர்வமாகச் சேர்த்து லாரன்ஸ் வாட்கின்ஸ் கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.
புதிய பெயர்களை சேர்க்கும் முயற்சிக்கு அந்நாட்டு பதிவாளர் தடை விதித்தபோதும், அந்நாட்டு உச்சநீதிமன்றத்துக்கு சென்று லாரன்ஸ் வாட்கின்ஸ் சட்டப்போராட்டம் நடத்தி வென்றுள்ளார்.
இவரை போல வேறு யாரும் பெயரை சேர்க்க இறங்கிவிடக் கூடாது என்பதற்காக, நியூசிலாந்து அரசு 2 சட்டங்களையே மாற்றியுள்ளது.