இழிவான தன்மையுடன் சாலை, தெருக்கள் பெயர்களில் சாதி பெயர்கள் இருந்தால் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றி, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் முதுகெலும்பு கிராமங்கள் தான் எனவும் அரசின் திட்டங்கள்தான் கிராம ஊராட்சி மேம்பாட்டிற்கு அடிப்படை எனவும் கூறினார்.
தமிழ்நாட்டு வரலாற்றிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளை இணையவசதி மூலம் இணைத்துக் கிராம சபை கூட்டத்தை நடத்துவது இதுவே முதல்முறை எனவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், குடியிருப்புகள், தெருக்களில் இழிவான தன்மையுடன் சாதிப் பெயர்கள் இருந்தால் அதை மாற்றிப் பொதுப்பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அவர்களை மீட்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.