பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போராட்டத்திற்கான காரணம், குறித்து தற்போது பார்க்கலாம்.
பாகிஸ்தானில் தற்போது நிலவும் கூடுதல் பதற்றத்திற்கு தெஹ்ரீக்-இ-லபாய்க் நடத்திய பேரணிதான் காரணம். பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராகப் பேரணியாக செல்ல முயன்றனர்.
தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கிப் பேரணியாகச் சென்ற அவர்களை பாதுகாப்புப் படை தடுத்து நிறுத்தியது. இதனால் தெஹ்ரிக்-இ-லபாய்க் அமைப்பினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த பயங்கர மோதல், திடீரென வன்முறை கொப்பளிக்கும் போர்க்களமாக மாறியது.
கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் காவல்துறையினரை இஸ்ரேலிய குண்டர்கள் என்று அழைத்த தெஹ்ரீக்-இ-லபாய்க் அமைப்பினர், போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், 11 பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.
தெஹ்ரீக் அமைப்பின் தலைவர் சாத் ரிஸ்வி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட சென்றவர்களை தடுக்க, போலீசார், தடுப்புகள் அமைத்தும், அகழிகள் தோண்டியும், கப்பல் கொள்கலன்களையும் அடுக்கி வைத்திருந்தனர்.
கைது ஒரு பிரச்சனையல்ல, தோட்டாக்கள் ஒரு பிரச்சனையல்ல, குண்டுகள் ஒரு பிரச்சனையல்ல – தியாகம்தான் எங்கள் விதி எனத் தெஹ்ரரீக் தலைவர் சாத் ரிஸ்வி தெரிவித்தார். போராட்டங்களும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையும் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் இரண்டாவது நாளாக வாழ்க்கையை முடக்கியது, இரண்டு நகரங்களும் ஒரு கோட்டையாகப் போன்று மாறியது, முக்கிய சாலைகள் சீல் வைக்கப்பட்டன, வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன, இணைய சேவைகள் முடக்கப்பட்டன.
பாலஸ்தீன ஆதரவு போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுவதாகப் பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ள நிலையில் எந்தவொரு குழுவும் வன்முறையைப் பயன்படுத்தவோ அல்லது அரசை அச்சுறுத்தவோ அரசு அனுமதிக்காது என்றும் தெரிவித்துள்ளது.