விரைவில் சீன அதிபரை நேரில் சந்திக்கப் போவதாக அறிவித்த சிலநாட்களிலேயே, அவரைச் சந்திக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். மேலும், சீனா மீது 100 சதவீத வரி விதிக்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். சீனா மீதான ட்ரம்பின் திடீர் கோபத்துக்கு என்ன காரணம் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும் சீனாவும் எப்போதும் எதிர் எதிர் துருவங்களாகவே உள்ளன. அதிலும் சீன அதிபர் ஜிஜின்பிங்க்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை முந்தைய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, சீனா மீது வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் தெரிவித்திருந்தார். தனது பதவியேற்பு விழாவுக்குச் சீன அதிபருக்குப் பிரத்யேக அழைப்பும் விடுத்திருந்தார் ட்ரம்ப் என்றாலும், அவ்விழாவில் சீன அதிபர் கலந்து கொள்ளவில்லை.
முன்னதாக, சீனாவில் இருந்து ஏற்றுமதியாகும் அரியவகை தாதுக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளையும் குறிப்பிட்ட சில நாடுகளுக்குமான ஏற்றுமதிக்கும் சீனா தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, சீனா- அமெரிக்கா வர்த்தகப் போர் தொடங்கியது. சீனா மீது ட்ரம்ப், மொத்தமாக 185 சதவீதம் வரை வரிகளை விதித்தார்.
பதிலுக்கு ஜிஜின்பிங்கும் அமெரிக்கா மீது 175 சதவீதம் வரிகளை விதித்தார். இருநாடுகளுக்கும் இடையே நடந்த வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டதும் இருநாடுகளும் தாம் விதித்த வரிகளை நிறுத்திவைத்தன.
முதல்கட்ட பேச்சுவார்தைகளில், சீனாவுக்கு கூடுதலாக 30 சதவீத வரி மட்டுமே விதிக்கப் பட்டது. மற்ற வரிகள் எல்லாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது. ஏற்கனவே அமலில் இருந்த 25 சதவீத வரியுடன் 30 சதவீதத்தை சேர்த்து மொத்தம் 55 சதவீத வரி சீனா மீது அமெரிக்கா விதித்திருக்கிறது.
சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 10சதவீதமாகக் குறைத்தது. சீனாவின் சோயாபீன்ஸ் இறக்குமதியில் 90 சதவீதம் அமெரிக்காவின் பங்கு என்ற நிலையில், கடந்த ஆண்டு 1 லட்சம் கோடி ரூபாமதிப்புக்குச் சீனாவுக்குகு அமெரிக்கா சோயா பீன்ஸை ஏற்றுமதி செய்தது. வர்த்தகப்போர் காரணமாக இந்த ஆண்டு சீனா ஆட்டத்தை மாற்றியது.
அமெரிக்காவில் இருந்து கொள்முதல் செய்யும் சோயாபீன்ஸை வாங்க மறுத்தது. அதற்குப் பதிலாக, பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசிலில் இருந்து சோயாபீன்ஸை சீன அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் அமெரிக்க சோயாபீன்ஸ் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
ஏற்கெனவே ட்ரம்பின் முதல் பதவிக் காலத்தில், சீனா மீதான பழிவாங்கும் வரிவிதிப்பு காரணமாக, அமெரிக்காவின் விவசாய ஏற்றுமதியில் 27 பில்லியன் டாலர்களுக்கு மேல் இழப்புகள் ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி, இன்னும் நான்கு வாரங்களில் அதிபரைச் சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் அறிவித்தார்.
சீனாவின் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க சோயா பீன்ஸ் விவசாயிகளை ஒருபோதும் கைவிட மாட்டேன் என்று உறுதியளித்த ட்ரம்ப், இதுதொடர்பாகவே நவம்பரில் நடக்கவிருக்கும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் சீன அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாகவும் தெரிவித்தார்.
மேலும் அடுத்த ஆண்டு சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பாக சீனாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.அமெரிக்க அதிபரை சந்திக்க சீன அதிபர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ஏற்பட்ட அவமானமாக பார்க்கப்படுகிறது.
மேலும், அரியவகை கனிமங்கள் ஏற்றுமதிக்குச் சீனா மேலும் பல புதிய கட்டுப்பாடுகளைத் திடீரென விதித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதமே காலியம், ஜெர்மானியம் மற்றும் ஆண்டிமனி உள்ளிட்ட சில கனிமங்களுக்கு ஏற்றுமதி தடை விதித்த சீனா, கடந்த ஏப்ரலில் டிஸ்ப்ரோசியம், டெர்பியம் மற்றும் காடோலினியம் உள்ளிட்ட ஏழு முக்கிய அரிய பூமி தனிமங்கள் மற்றும் அரிய பூமி காந்தங்களை ஏற்றுமதி செய்வதற்குப் புதிய கட்டுப்பாடுகளையும் விதித்தது.
இப்போது அந்தப் பட்டியலில் மேலும் பல கனிமங்களைச் சேர்த்துள்ளது. இதன் விளைவாக, அமெரிக்க பொருளாதாரம் மற்றும் இராணுவப் பாதுகாப்பு உற்பத்திகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சீனா இப்படியான ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை நம்பமுடியவில்லை என்றாலும் எடுத்துள்ளது என்பதே உண்மை எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க போவது இல்லை என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
மேலும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல், சீனாவின் எந்தப் பொருளுக்கும் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அதனால், சீனா-அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் மீண்டும் தொடங்கியுள்ளது.