வானில் பறந்து கொண்டே இயற்கை அழகை ரசிக்கும் வகையில், புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறையானது, உலக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனம் சார்பில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3 நாட்களுக்கான ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்து, சுமார் 20 நிமிடங்களில் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு தலா 5,999 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்த சுற்றுலா திட்டமானது மாதத்தில் மூன்று முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து வரும் காலத்தில் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.