100 சதவீத வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அண்மையில் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா தன்னிச்சையான இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், நிச்சயமாக எதிர் நடவடிக்கை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்கா தனது போக்கில் தொடர்ந்தால், சீனா அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனா போராட விரும்பவில்லை எனவும், அதேநேரத்தில் போராட பயப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.