காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில், பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிந்து விட்ட நிலையில் அந்த பகுதிகளில் தாளடி பருவ நெல்லும், மற்ற பகுதிகளில் சம்பா பருவ நெல்லும் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், போதிய உரம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான உழவர்கள் உரம் இட முடியாமல் தங்கள் பயிர் என்னவாகுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
உரத்தட்டுப்பாட்டை சரி செய்ய திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறட்டை விட்டு உறங்குவதாக விமர்சித்துள்ள அன்புமணி, உழவர்களுக்கு தேவையான உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். ….