சென்னை வியாசர்பாடி கணேசாபுரம் மேம்பால பணிகள் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகியும் பணிகள் மந்த நிலையில் நடைபெறுவதால் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்லவே சிரமப்படும் நிலையில், பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பருவ மழையின் போது சென்னை மாநகரில் மழை நீரால் தத்தளிக்கும் பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் வட சென்னை. வடசென்னையின் கணேசபுரம் சுரங்கப்பாதை மழை நீரால் மூழ்குவதையும் அப்பகுதி மக்கள் படும் துயரத்தினையும் ஆண்டுதோறும் பார்க்க முடிகிறது.
வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும் என்ற சூழலால் போக்குவரத்து நெரிசலும் அதிகளவு ஏற்படுகிறது.
பொதுமக்கள் சந்திக்கும் சிரமங்களை தவிர்க்கும் வகையில் 226 கோடி ரூபாய் செலவில் 600 மீட்டர் தூரத்திற்கு கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. 50 சதவிகிதம் பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமிருக்கும் பணிகள் எப்போது முடியும் என அப்பகுதி மக்களும், வியாபாரிகளும் மிகுந்த ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
கணேசபுரம் மேம்பால திட்டம் தொடங்கிய நாட்களில் மகிழ்ச்சியாக இருந்த பகுதி மக்கள், ஆமை வேகத்தில் நடந்து வரும் பணிகளை கண்டு மிகுந்த அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மீண்டும் மழையால் தத்தளிக்கும் அவல நிலையை நினைத்து அவர்கள் வேதனையடைந்துள்ளனர். வருடக்கணக்கில் நடைபெறும் பணிகளால் அப்பகுதிகளில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதில் தொடங்கி, மருத்துவமனைக்கு கூட பல கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆமை வேகத்தில் நடைபெறும் பணிகளை விரைவுபடுத்தி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளது.