தென்சீன கடல் பகுதியில் சீன கப்பல், தங்களின் படகு மீது திட்டமிட்டு மோதியதாகப் பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
தென்சீன கடல் பகுதி அதிகளவில் மீன், எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்கள் உள்ளதால் அந்த பகுதியை சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகள் உரிமை கோரி வருகின்றன.
சீனா, முழு பகுதியையும் உரிமை கோருவதுடன், கடலோர காவல்படை கப்பல்கள் வாயிலாக மற்ற நாடுகளின் செயல்பாடுகளைத் தீவிரமாக தடுத்து வருகிறது.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தீவு அருகில் நிறுத்தப்பட்டிருந்த, அந்நாட்டுக்கு சொந்தமான படகின் மீது, சீன கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் திட்டமிட்டு, மோதியதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பிலிப்பைன்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு சொந்தமான படகின் மீது, சீன கப்பல் வேண்டுமென்றே மோதியுள்ளதாகவும் பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த சம்பவம்குறித்து சீன அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களின் கப்பலை நோக்கி ஆபத்தான முறையில் வந்த பிலிப்பைன்ஸ் படகுக்குப் பலமுறை எச்சரிக்கை விடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அந்தப் படகு, கப்பல் மீது மோதியதாகவும், இதற்கான முழு பொறுப்பும் பிலிப்பைன்சையே சேரும் என்றும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தச் சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.