ஏ.ஐ. தொழில்நுட்பம் சர்வதேச அளவில் லட்சக்கணக்கானோரின் வேலையை பறித்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறது கூகுள். ஏ.ஐ.தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளை உருவாக்குமே தவிர, பணியாளர்களுக்கு மாற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறது. என்ன காரணம் தற்போது பார்க்கலாம்.
சர்வதேச அளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஏ.ஐ.தொழில்நுட்பம் Tech துறையில் புதிய பாய்ச்சலுடன் வளர்ந்து வருகிறது… மனித ஆற்றலுடன் ஒப்பிடும்போது, மிக எளிதாக ஒரு பணியை செய்து முடிக்கக்கூடிய திறனால், பல டெக் நிறுவனங்கள், ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பக்கம் தங்களது கவனத்தை திருப்பின.
பல்வேறு துறைகளில் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தி வருவதன் எதிரொலியாக, குறிப்பாக ஐ.டி.துறையில் நாளுக்கு நாள் ஊழியர்களின் பணிநீக்கம் பற்றிய அறிவிப்புகள் கிலியை ஏற்படுத்தி வந்தன. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மின்னல் வேக வளர்ச்சியால், எதிர்காலத்தில் 70 சதவிகிதம் வேலைவாய்ப்பு பறிபோகும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் நடக்காது என்று கூறியுள்ள கூகுள் கிளவுட் தலைமை நிர்வாக அதிகாரி தாமஸ் குரியன், செயற்கை நுண்ணறிவு, பணியாளர்களின் திறனை மேம்படுத்த உதவுமே தவிர, பணியாளர்களுக்கான மாற்று அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை வேலைக்கு பதிலாகப் பார்க்கும் கண்ணோட்டத்தை விடுத்து, அது மனிதர்களின் திறனை பெருக்கும் கருவியாகப் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஏ.ஐ. தொழில்நுட்பம் சேவை துறையில் வேலைகளை பறித்துவிடும் என்ற கவலை இருந்தபோதும், கூகுளின் வாடிக்கையாளர் ஈடுபாட்டுத் தொகுப்பைப் பயன்படுத்திய பின்னர், தங்கள் வாடிக்கையாளர் யாரையும் வேலையை விட்டு அனுப்பவில்லை என்று தாமஸ் குரியன் விளக்கம் அளித்துள்ளார்.
இதே போன்று அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, ஏ.ஐ. டூல்ஸ் மூலம் தங்களது பொறியாளர்களிடையே 100 சதவிகித உற்பத்தித் திறன் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அதன் வெளிப்பாடாக ஊழியர்களை குறைப்பதற்கு பதிலாக, அடுத்த ஆண்டில் அதிக பொறியாளர்களை நியமிக்கக் கூகுள் திட்டமிட்டுள்ளது என்ற மகிழ்ச்சிகரமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் சுந்தர் பிச்சை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதர்கள் திரும்பத் திரும்ப செய்யும் பணிகளை நீக்குவதோடு, பொறியாளர்களுக்கு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்யத் தூண்டுவதாகவும் சுந்தர் பிச்சை கூறியிருந்தார். ஏ.ஐ. தொழில்நுட்பம் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளை நீக்கி, பொறியாளர்களுக்கு அதிக ஆக்கபூர்வமான பணிகளைச் செய்வதற்கான சுதந்திரத்தை அளிப்பதாகவும் சுந்தர் பிச்சை தெரிவித்தார். இது போன்ற நம்பகமான கருத்துகள், வேலை பறிபோகுமோ என்ற ஏக்கத்தில் இருந்து ஊழியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது என்றே கூறலாம்.
















