ராஜஸ்தானில் அமானுஷ்ய சக்திகள் நிறைந்த திகில் நிறைந்த கிராமம் என்று சமூக வலைதளங்களில் மிகுந்த கவனம் பெற்று வருகிறது… தற்போது அங்கும் பேய்கள் உலா வருவதாக நம்பப்படுவதால், மாலை 6 மணிக்கு மேல் அந்தக் கிராமத்திற்குள் கண்டிப்பாகத் தங்கவே கூடாது என்ற தடையும் அமலில் உள்ளது.
இடிந்த நிலையில் வீடுகள், அச்சுறுத்தும் காற்று… அமைதியான தெருக்கள்.. என ஆள்நடமாட்டமே இல்லாமல் திகிலூட்டிக் கொண்டிருக்கிறது மனிதர்களால் கைவிடப்பட்ட குல்தாரா கிராமம்.
ராஜஸ்தானின் தார் பாலைவனத்தின் இதயப் பகுதியான ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் நூற்றாண்டு பழமையை தாங்கிக் கொண்டு உறைந்து போய் நிற்கிறது குல்தாரா கிராமம். ஒரு காலத்தில் பாலிவால் பிராமணர்கள் வாழ்ந்த வளமான பகுதியாக இருந்த இந்தக் கிராமம் தற்போது அமானுஷ்ய சக்திகள் நிறைந்த பயங்கரமான நினைவுச் சின்னமாக மாறி நிற்கிறது.
அறிவுத்திறன், விவசாய கண்டுபிடிப்புகள், சமூக வாழ்க்கைக்கு பெயர் போன இந்தப் பகுதியை முழு கிராமமும் ஒரே இரவில் கைவிட்டிருப்பது ஏன் என்ற கேள்விக்கு இன்றளவும் விடை கிடைக்கவில்லை.
13ம் நூற்றாண்டில் ராஜஸ்தானின் பாலி பகுதியில் இருந்து குடிபெயர்ந்த பாலிவால் பிராமணர்கள் குல்தாரா கிராமத்தை உருவாக்கினர். கொடூரமான பாலைவனத்தில், நீரை பாதுகாப்பது எப்படி என்பதில் கைதேர்ந்தவர்களாக இருந்த அவர்கள், படிகட்டுகள் நிறைந்த கிணறுகள், நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பட்ட நீர்பாசன முறைகளை ஏற்படுத்தியிருந்தனர்.
அறிவு செறிந்த சமூகத்தினால், பாலைவனத்திலும் செழிப்பாக அவர்கள் வாழ்ந்தார்கள் என்பதும், குல்தாரா உள்பட 83 கிராமங்களை தங்களது நிர்வாகத்தின் கீழ் செழிப்பாக வைத்திருந்தார்கள் என்பதும் கடந்த கால வரலாறு. இப்படிப்பட்ட கிராமத்தைக் கைவிட வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்ற கேள்விக்கு உண்மையான விடை கிடைக்காவிட்டாலும், சில கதைகள் குல்தாராவை தாங்கியபடி நிற்கின்றன.
19ம் நூற்றாண்டில் முற்பகுதியில் ஜெய்சால்மரின் சக்திவாய்ந்த, இரக்கமற்ற திவான் சலீம் சிங் ஆட்சிக்காலத்தில்தான் அது நடந்தேறியிருக்கிறது… இளம் பிராமண பெண்ணின் அழகில் மயங்கிய சலீம் சிங், அவளை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும், மறுத்தால், குல்தாரா கிராமத்திற்கு கடுமையாக வரி விதிக்கப்படும் என்று அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் திவான் சலீம் சிங்கின் கொடுங்கோன்மைக்கு அடிபணியாத குல்தாரா கிராம மக்கள், அதிர்ச்சிகரமான முடிவை எடுத்தனர். அதுதான் இரவோடுஇரவாகத் தங்கள் நிர்வாகத்தின் கீழ் இருந்து அனைத்து கிராமங்களையும் கைவிடும் முடிவு. குல்தாரா கிராமத்தை துறந்த அவர்கள், அங்கு யாரும் மீண்டும் வசிக்காதபடி கடுமையான சாபத்தையும் இட்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால்தான் இதுவரை குல்தாரா கிராமத்தில் யாராலும் குடியேற முடியவில்லை என்ற காரணமும் முன் வைக்கப்படுகிறது. இதன் காரணமாக அங்கு அமானுஷ்ய சக்திகள் நிறைந்திருப்பதாகவும், இரவில் பேய்கள் உலா வருவதாகவும் பலராலும் நம்பப்படுகிறது.
ஆனால் இதற்குத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களம், வரலாற்று ஆய்வாளர்களும் கூறும் கதையே வேறு… தண்ணீர் பற்றாக்குறை, பொருளாதார வீழ்ச்சி, அடுத்தடுத்த படையெடுப்புகள், வரிச்சுமைகள், வர்த்தக இடையூறுகள் காரணமாகப் பாலிவால்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம் என்பது அவர்களது கூற்று…இருப்பினும் குல்தாராவில் நீடிக்கும் மர்மத்தை உறுதிபடுத்தும் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள குல்தாரா, பாரம்பரிய தலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள. இடிபாடுகள் நிறைந்த வீடுகள், குறுகிய வீதிகள், கூரை இல்லாமல் வானமே எல்லையாகக் காட்சியளிக்கும் கட்டட எச்சங்கள், சிவனுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட கோயில், கிணறுகளின் எச்சங்கள் போன்றவை சுற்றுலா பயணிகளிடையே ஆச்சர்யத்தையும், அறிய வேண்டிய ஆர்வத்தையும் தூண்டும் வகையில் உள்ளன. குல்தாராவில் ஒரு விசித்திருமான அமைதியை உணருவதாகப் பார்வையாளர்கள் கூறுவது ஒருபக்கம் இருந்தாலும், உள்ளூர்வாசிகள் இரவில் ஆவிகள் நடமாட்டத்தையும், அமானுஷ்ய சக்திகள் பற்றியும் பேசி வருகின்றனர்.
கிராமத்திற்குள் இரவு தங்குவதற்கு அனுமதியில்லை என்றபோதும், பார்வையாளர்களின் வருகை, குல்தாராவை ராஜஸ்தானின் மிகவும் பிரபலமான பேய் கிராமமாகவே மாற்றியுள்ளது. இது சர்வதேச அளவில் பயணிகள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் அமானுஷ்ய ஆர்வலர்களை ஈர்த்து வருகிறது.
குல்தாராவின் கதை உண்மைக்கும், கட்டுக் கதைகளுக்கும் இடையே பின்னிப் பிணைந்துள்ளது. கிராமவாசிகள் அடக்குமுறை, வறட்சி அல்லது பண்டைய சாபம் காரணமாக வெளியேறினாலும், அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறியது தீர்க்கப்படாத மர்மங்களில் ஒன்றாக நீடிக்கிறது. குல்தாரா வெறும் பேய் கிராமமாக மட்டுமல்லாமல், தைரியம், கண்ணியம் மற்றும் எதிர்ப்பின் அடையாளத்தையும் தாங்கி அமைதியாக நிற்கிறது.
















