பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலுக்குப் பதிலடியாக தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 58 பாகிஸ்தான் படையினர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பை தற்போது காணலாம்…
பாகிஸ்தான் – ஆஃப்கானிஸ்தான் எல்லை பகுதிகளில் அண்மை காலமாகப் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சமீபத்தில் காபுலில் தெஹ்ரீக்-இ-தலிபான் மையங்களை குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை திடீர் தாக்குதல் நடத்தியது.
இதில் 20-க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதுவரை இந்தத் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பொறுப்பேற்காத நிலையில், தங்கள் மீதான தாக்குதலுக்குப் பாகிஸ்தானே காரணம் எனத் தலிபான்கள் குற்றம் சாட்டினர்.
அதன் எதிரொலியாகவே பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள ஒரு காவலர் பயிற்சி மையத்தைக் குறிவைத்து தலிபான் சார்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. 3 பேர் கொண்ட குழு நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் காரணமாக இரு தரப்பினரிடையே சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாகத் துப்பாக்கி சண்டை நீடித்தது.
தாக்குதல் நடத்திய 3 பேரும் பாகிஸ்தான் படையினரால் சுட்டு கொல்லப்பட்டபோதும், பாகிஸ்தான் தரப்பு இந்த தாக்குதலுக்குப் பெரும் விலை கொடுக்கவேண்டி இருந்தது. பலர் உயிரிழந்த நிலையில் ஏராளமானோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் காவலர் பயிற்சி மையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இது தொடர்பாகத் தலிபான் செய்தி தொடர்பாளர் சபீஹுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தான் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் படையினர் 58 பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
தலிபான்கள் மீது நடத்தப்படும் அனைத்து தாக்குதல்களுக்கும் தக்க வகையில் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ள முஜாஹித், தங்கள் நிலப்பரப்பையும், வான்பரப்பையும் பாதுகாப்பது தங்களின் உரிமை என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஆஃப்கானிஸ்தானிலிருந்து அகற்றப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் என்ற துஷ்ட சக்திகள், தற்போது பாகிஸ்தானின் பக்துன்வா மாகாணத்தில் புதிய மையங்களை அமைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி விமான நிலையங்கள் வழியாக அந்த மையங்களில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், அங்கிருந்து ஆஃப்கானிஸ்தான் மீது தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிடுவதற்கான ஆவணங்கள் அனைத்தும் தங்களிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
எனவே பாகிஸ்தான் தங்கள் நிலப்பரப்பில் ஒளிந்துள்ள ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினரை வெளியேற்றவோ அல்லது ஆஃப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்ஸிடம் ஒப்படைக்கவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சபீஹுல்லா முஜாஹித் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இதற்கிடையே தலிபான்களின் தாக்குதலுக்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், தலிபான்களின் தாக்குதலுக்குத் தங்கள் படைகள் தக்க பதிலளித்துள்ளதாகக் கூறியுள்ள ஷெபாஸ் ஷெரீஃப், பாகிஸ்தானின் பாதுகாப்பில் எந்தச் சமரசமும் இருக்காது என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். இப்படி இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், அவ்விரு நாடுகளின் எல்லை பகுதிகளில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த மோதல் தெற்காசிய பிராந்திய அமைதிக்கு புதிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் புவிசார் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
















