அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு தொடர்ந்த வழக்கில், குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது DMK FILES என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்டார். அதில், திமுக எம்பி டி.ஆர்.பாலு, அவரின் மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா மற்றும் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இது தன்னுடைய நற்பெயர் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி அண்ணாமலைக்கு எதிராக டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அண்ணாமலை முழுமையான அரசியல்வாதி அல்ல என்றும் அதனால் அவர் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது எனவும் டி.ஆர் பாலு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஒரு முழுமையான அரசியல் வாதி என்பவர் பொதுமக்களுக்கும், சமூகத்திற்கும் உண்மையாக இருக்க வேண்டும், கொள்ளை அடிக்காமல், பொய் சொல்லாமல் இருக்க வேண்டும் என அண்ணாமலை தரப்பு வழக்கறிஞர் பால்.கனகராஜ் கூறினார்.
மேலும், டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்வதற்கு அண்ணாமலையை அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் பால் கனக்ராஜ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலைக்கு அனுமதி வழங்கிய சைதாப்பேட்டை நீதிமன்றம், வழக்கை நவம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.