சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் இடையே ஓடும் பிரம்மபுத்திரா நதியின் யார்லுங் சாங்போ ஆற்றின் மீது உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையைச் சீனா கட்ட தொடங்கியுள்ளது.
இதனால், இந்தியா மற்றும் வங்கதேசம் நாடுகளில் பிரம்மபுத்திரா நதியால் பயனடையும் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், சீனாவுக்குப் போட்டியாக சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்தை இந்தியா செயல்படுத்த உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் புதிய நீர்மின் திட்டம் அமைய உள்ளதாகவும், 2047ஆம் ஆண்டுக்குள் பிரம்மபுத்ரா ஆற்றில் இருந்து 76 ஜிகாவாட்களுக்கு மேல் நீர்மின்சாரத்தைப் பெறும் வகையில் திட்டம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அசாம், அருணாச்சல் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பிரம்மபுத்ரா நதியின் துணைஆறுகளையும் சேர்த்து மிகப்பெரிய நீர்மின் திட்டம் உருவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.