கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில் முக்கிய திருப்பமாக, இஸ்ரேலில் இருந்து, கடத்திச் செல்லப்பட்ட பணயக்கைதிகள் அனைவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒப்படைத்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. தொடர்ந்து, இஸ்ரேல் ஹமாஸ் போர் முடிந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2023ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 250 பேரைப் பணயக் கைதிகளாக ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைப்பிடித்துச் சென்றனர்.
730 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 20 அம்சங்களுடன் கூடிய காசா அமைதி திட்டத்தை அறிவித்தார். இந்த அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தை ஏற்றுக்கொண்ட ஹமாஸ், தங்கள் சிறைப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகளில் உயிருடன் உள்ள 20 பேரை விடுவிக்க ஒப்புக் கொண்டது.
அதன் படி, 7 பேரை விடுவித்த ஹமாஸ் பயங்கரவாதிகள், மிச்சமுள்ள 13 பேரைச் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். காசாவில், வீடு திரும்பும் பாதையெங்கும் இஸ்ரேல் தேசிய கொடிகள் பறக்க, திரும்பிவரும் பாதையின் ஒவ்வொரு பகுதியையும் ஒரு இராணுவ அணிவகுப்பாக மட்டுமில்லாமல், வாழ்க்கையின் நம்பிக்கையைக் காட்டும் அடையாளமாகவும் அமைத்திருந்தது இஸ்ரேல் இராணுவம்.
விடுதலைக்கு முன்னதாக, பணயக்கைதிகளில் சிலர்த் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேசி தங்கள் அன்பைப் பரிமாறி கொண்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் அன்புக்குரியவர்களை வீடியோ காலில் பார்த்த குடும்ப உறுப்பினர்கள் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்தனர்.
பணயக்கைதிகள் ஒப்படைப்பு நிகழ்வை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேல் மக்கள் கைதட்டி ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள். பணயக் கைதிகளை வரவேற்கும் விதமாகப் பாரம்பரிய யூதச் சங்கு ஊதி ஒருவர் சந்தோஷத்தைக் கொண்டாடினார்.
இஸ்ரேல் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது மனைவி சாராவும் தங்கள் கையால் இஸ்ரேல் மக்கள் அனைவரின் சார்பாகவும், காத்திருந்து கட்டிப்பிடித்து வரவேற்பதாக எழுதப்பட்ட குறிப்புகளுடன் கூடிய பரிசுகள் திரும்பி வந்த பணயக்கைதிகளுக்கு வழங்கப்பட்டது.
பிரத்யேக ஆடை, ஒரு மடிக்கணினி, ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் ஒரு டேப்லெட் ஆகியவை அடங்கிய வரவேற்புக்கான பரிசு பெட்டி, திரும்பி வரும் ஒவ்வொரு பணயக்கைதிக்கும் வழங்கப் பட்டுள்ளது. கொல்லப்பட்ட பணயக்கைதிகளின் உடல்களைப் பெறுவதற்குமான பணிகளும் நடந்து வருகின்றன.
போரின்போது காசாவிலிருந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்ட 1,700 பேரைத் தவிர, இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்களில் தண்டனைப் பெற்றதற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 250 ஹமாஸ் பயங்கரவாதிகளையும் மேற்குக் கரை அல்லது காசாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது காசா அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தின் பணயக் கைதிகள் மற்றும் சிறைக் கைதிகள் பரிமாற்றத்துக்குப் பின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக இஸ்ரேல் வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பத்திரமாக மீட்கப்பட்ட பணயக்கைதிகளின் குடும்பங்களை இஸ்ரேல் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரில் சந்தித்துள்ளனர். போர் முடிந்துவிட்டது என்றும், இது ஒரு சிறந்த நாள் என்றும் இது ஒரு புதிய ஆரம்பம் என்றும் கூறிய ட்ரம்ப், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடையும் திட்டமும் நிறைவேற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
















