இஸ்ரேலில் ஹமாஸ் தீவிரவாதிகளால் பணயக்கைதியாகப் பிடித்து செல்லப்பட்ட ஒரே இந்துவான நேபாள மாணவர் சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
“இறந்துவிட்டார்”, இந்த ஒற்றை வார்த்தை, இதயத்தை உறைய வைக்கிறது. பெயர், முகம், நம்பிக்கை எல்லாமே ஒரு கணம் மறத்து விடுகிறது. இனம் புரியாமல் உடல் நடுங்குகிறது. அப்படி ஒரு செய்தி, கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வந்தது.
ஹமாஸ் பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட ஒரே நேபாளரான பிபின் ஜோஷி உயிருடன் இல்லை என்பதே அந்தச் செய்தி. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்த காசா அமைதி திட்டத்தின் முதல் கட்டமாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 20 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்ட மகிழ்ச்சியைத் தொடர்ந்து, சில நிமிடங்களிலே துக்கமும் வேதனையும் வந்தது.
நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இறந்தவர்களில் பணயக் கைதியாகச் சிறைப் பிடிக்கப் பட்ட ஒரே இந்துவான நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷியும் ஒருவர். இத்தகவலை இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் எஃபி டெஃப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைத்த பணயக் கைதிகளின் உடல்கள் டிஎன்ஏ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, யாருடைய உடல் என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்படும் என்று இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர் தனப் பிரசாத் பண்டிட் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிபின் ஜோஷியின் மூத்த சகோதரர்க் கிஷோர் ஜோஷி, தாய் பத்மா, மற்றும் தங்கைப் புஷ்பா ஆகியோருடன் காணொளி சந்திப்பை இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் நடத்தினர். அதில்,
உயிருடன் இருக்கும் உறுதிசெய்யப்பட்ட பணயக் கைதிகளின் பட்டியலில் பிபின் ஜோஷியின் பெயர் சேர்க்கப்படவில்லை என்று அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டது.
முன்னதாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக, இஸ்ரேலுக்கும் நேபாளத்துக்கும் அலைந்த பிபினின் தாயும் தங்கையும் அந்நாட்டின் அதிபர், பிரதமர், மற்றும் நாடாளுமன்ற சபாநாயகரையும் சந்தித்துப் பிபின் ஜோஷியின் விடுதலைக்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
அதே ஆண்டு, செப்டம்பரில், இஸ்ரேலின் பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்ற பிபின் குடும்பத்தினர் ஐநா பொதுச் சபையிலும் முறையிட்டனர். 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
ஏவுகணைத் தாக்குதல் மட்டுமின்றி, இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 நேபாள மாணவர்கள் கொல்லப்பட்டனர். ஐந்து பேர் காயமடைந்தனர், ஒருவர் காயமின்றி தப்பினார். ஜோஷியையும் தாய்லாந்து மாணவர் ஒருவரையும் ஹமாஸ் பயங்கரவாதிகள் சிறைப் பிடித்துச் சென்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இஸ்ரேல் இராணுவத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சிகளில் ஜோஷி, காசாவின் ஷிஃபா மருத்துவமனைக்கு இழுத்துச் செல்லப்படுவதைக் காட்டியது, அவர் உயிருடன் இருப்பதாக அறியப்பட்ட கடைசி காட்சி அது தான்.
33 வினாடிகள் நீளமுள்ள அந்த வீடியோவில், பிபின் ஜோஷி, 23 வயதான தாம் நேபாளத்தைச் சேர்ந்த மாணவன் என்றும், வேலையுடன் கூடிய படிப்பு என்ற திட்டத்தின் கீழ் 25 நாட்களுக்கு முன்பு இஸ்ரேலுக்கு வந்ததாகவும், எலுமிச்சைப் பண்ணையில் வேலைச் செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.
நம்பிக்கையின் ஒளியாகத் தோன்றிய அந்த வீடியோ, பிபின் ஜோஷியின் உயிருக்கு உறுதியான சான்றாக மாறவில்லை. ஆனாலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் அவர் பாதுகாப்பாக வீடு திரும்புவார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
உயிர் பிழைத்த பணயக்கைதிகளின் பட்டியலில் பிபின் பெயர் இல்லை என்று இஸ்ரேலுக்கான நேபாளத் தூதர் கூறிய போது, கசப்பான உண்மை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.
உயிரோடு திரும்பி இருந்தால், வரும் அக்டோபர் 26ம் தேதி தனது 25 பிறந்த நாளை குடும்பத்தினருடன் கொண்டாடி இருப்பார் பிபின். 738 நாட்களாக ஒவ்வொரு இரவும் பிபினின் தாயார் செய்த பிரார்த்தனை பதிலளிக்கப்படாத பிரார்த்தனையாக முடித்துள்ளது.
இது ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. இது ஒரு தேசிய துக்கம். ஒரு இளம், திறமையான வாழ்க்கையின் முடிவு. பிபின் ஜோஷியின் வாழ்க்கை நம்பிக்கையின் மீது அமைக்கப்பட்டிருந்தது. அவரது மரணம் அந்த நம்பிக்கையை மனவேதனையாக மாற்றியுள்ளது.
















