இந்தியாவின் டிஜிட்டல் சுயநிலையை முன்னேற்றும் விதமாக மத்திய அரசின் அனைத்து மின்னஞ்சல் சேவைகளும் ZOHO-விற்கு மாற்றப்பட்டுள்ளன. இது குறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.
ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், தலைமை விஞ்ஞானியாகவும் பொறுப்பு வகிக்கும் ஸ்ரீதர் வேம்பு, கடந்த 2021-ம் ஆண்டு முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக உள்ளார். அதனடிப்படையில் தேசிய பாதுகாப்பு சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளையும் தனது நிறுவனத்தின் மூலம் அவர் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாகத் தற்போது இந்திய அரசு தனது அதிகாரபூர்வ மின்னஞ்சல் சேவைகள் அனைத்தையும், தனது சொந்த நாட்டு தொழில்நுட்ப நிறுவனமான ZOHO-விற்கு மாற்றியுள்ளது.
இதன் மூலம் பிரதமர் அலுவலகம் உட்பட சுமார் 12 லட்சம் அரசு பணியாளர்களின் மின்னஞ்சல்கள், இதுவரைச் செயல்பட்டு வந்த NATIONAL INFORMATICS CENTER-ன் சேவைகளில் இருந்து, தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தைத் தலைமையிடமாக கொண்ட ZOHO நிறுவனத்தின் பாதுகாப்பான சர்வர்கள் மூலம் இயங்கவுள்ளன.
மேலும், அரசு துறைகளின் மின்னஞ்சல் முகவரிகள் வழக்கம்போல் nic.in அல்லது gov.in எனத் தொடரும் என்றாலும், அதன் பின்னணியில் செயல்படும் ஹோஸ்டிங் மற்றும் டேட்டா மேலாண்மை அனைத்தும் ZOHO-வின் பாதுகாப்பான சர்வர்கள் மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்திய அரசு ZOHO நிறுவனத்துடன் 7 ஆண்டுகால ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
இந்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த மாற்றம் நாட்டின் “டிஜிட்டல் சுயாட்சி” முயற்சியில் ஒரு முக்கிய மைல் கல்லாகக் கருதப்படுகிறது. தரவு பாதுகாப்பு, தாயக மென்பொருள் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்பங்களை சாந்திருப்பதைக் குறைப்பது உள்ளிட்ட அரசின் நோக்கங்களை முன்னிறுத்தியே, இந்தப் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான முதல் உத்தரவு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, துறைச் சார்ந்த அனைத்து அதிகாரிகளும் தங்கள் அலுவல் பணிகளில், ZOHO OFFICE SUITE கருவிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் WORD, EXCEL, PRESENTATION உள்ளிட்ட பணிகள் இனி இந்தியாவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் மூலமே மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசின் இந்த முடிவு நாட்டின் முக்கியமான தரவுகள் அனைத்தும் வெளிநாட்டு மென்பொருள்களால் வெளிப்படுவதிலிருந்து பாதுகாக்கவும், இந்தியாவின் சொந்த டிஜிட்டல் கட்டமைப்பை வலுப்படுத்தவும் வழிவகுக்கும் என துறைச் சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இது இந்திய தொழில்நுட்பத்திற்குப் பெருமை சேர்க்கும் முடிவு என்றாலும், END TO END ENCRIPTION மற்றும் சுயாதீனப் பாதுகாப்பு ஆய்வுகளை முழுமையாக மேற்கொள்வதும் அவசியம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ZOHO இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வாடிக்கையாளர்களின் தரவுகள் அனைத்தும் நிச்சயமாகப் பாதுகாக்கப்படும் எனவும், நம்பிக்கையே தங்கள் வணிகத்தின் அடித்தளம் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் அதிவிரைவில் ZOHO சேவைகளில் END TO END ENCRIPTION அமல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
“ஆத்மநிர்பார்ப் பாரத்” திட்டத்தின் மூலம் இந்திய அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, நாட்டின் சுயநிறைவு பார்வைக்கு ஒரு வலிமையான அடித்தளமாகப் பார்க்கப்படுகிறது. அத்துடன் இந்த முயற்சி எதிர்காலத்தில் உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியாவை முன்னிலைப்படுத்தும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.