இந்திய பணியாளர்களின் ஓய்வூதிய நிதி மேலாண்மையை எளிமைப்படுத்தும் வகையில், PROVIDENT FUND தொகைப் பெறும் விதிகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்.
இந்திய அரசின் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் EMPLOYEES PROVIDENT FUND ORGANISATION என்ற அமைப்பு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வுகால நிதி பாதுகாப்பை வழங்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தனது புதிய வடிவமான EPFO 3.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது PROVIDENT FUND தொகைப் பெறும் நடைமுறைகளை எளிமைப்படுத்தி, அவற்றை வேகமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றியமைத்துள்ளது. 30 கோடி ஊழியர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய நடைமுறை, ஊழியர்கள் தங்களது மொத்த PROVIDENT FUND நிதியில் இருந்து பென்ஷனுக்கான 25 சதவீதத் தொகையை விடுத்து, மீதமுள்ள 75 சதவீதத் தொகையை எடுக்க வழிவகுக்கிறது.
இதனால் ஊழியர்கள் அனைவரும் தங்கள் அவசரகால தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதுடன், ஓய்வுகால பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள முடியும். முன்னதாக PROVIDENT FUND தொகையைப் பெற 13 விதமான பிரிவுகள் மற்றும் சிக்கலான நிபந்தனைகள் இருந்தன. தற்போது அவை ஒருங்கிணைக்கப்பட்டு ESSENTIAL NEEDS என்னும் அத்தியாவசிய தேவைகள், HOUSING NEEDS என்னும் வீட்டு தேவைகள் மற்றும் SPECIAL CIRCUMSTANCES என்னும் சிறப்பு சூழ்நிலைகள் ஆகிய 3 முக்கிய பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளன.
இது PF தொகைப் பெறும் நடைமுறையைப் பெரிதும் எளிமையாக்கியுள்ளதுடன், முன்பிருந்த அனைத்துக் குழப்பமான விதிமுறைகளையும் நீக்கியுள்ளது. குறிப்பாகக் கடந்த காலங்களில் திருமணம், கல்வி, வீடு வாங்குதல் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு, PF தொகையை எடுக்கத் தனித்தனியாக 5 முதல் 7 ஆண்டுகள் வரைச் சேவை தேவைப்பட்டன. ஆனால், தற்போதைய புதிய விதிகளின்படி எந்தக் காரணத்திற்காகவும் PF தொகையைப் பகுதி அளவில் பெற, 12 மாத சேவைக் காலமே போதுமானது.
மேலும், முன்பு உடல்நலக்குறைவு, வேலை இழப்பு போன்ற காரணங்களுக்காக PF தொகைக் கோர ஆவணங்கள் கட்டாயமாக இருந்தன. ஆனால் தற்போது “சிறப்பு சூழ்நிலைகள்” என்ற பிரிவில் PF தொகைக் கோரும் ஒருவர் அதற்கான காரணத்தைக் கூற அவசியமில்லை.
அதேபோல, புதிய நடைமுறையின் கீழ்த் திருமணம் மற்றும் கல்வி போன்ற தேவைகளுக்கு PF தொகைக் கோரும் வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி தேவைகளுக்கு 10 முறை வரையிலும், திருமண தேவைகளுக்கு 5 முறை வரையிலும் PF தொகையைக் கோர வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக இவற்றுக்கு 3 முறை மட்டுமே அனுமதி இருந்தது. அதேவேளையில் வேலை இழப்புக்குப் பின் PF தொகையை முழுமையாகப் பெறும் விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக முன்பு ஊழியர்கள் முழு தொகையையும் 2 மாதங்களில் பெற முடிந்த நிலையில், தற்போது PF தொகையைப் பெற 12 மாதங்களும், பென்ஷன் தொகையைப் பெற 36 மாதங்களும் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், EPFO 3.0 ஒரு நீண்டகால நிதி பாதுகாப்பை நோக்கிய தீர்மானமாக இருந்தாலும், அடிக்கடி வேலை இழப்புகள் ஏற்படும் இந்தக் காலகட்டத்தில் இது சில ஊழியர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.
மற்றொருபுறம் EPFO 3.0 தனது டிஜிட்டல் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட, AUTO SETTLEMENT SYSTEM என்ற தானியங்கி கோரிக்கைச் செயல்முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் PF தொகைக்கான கோரிக்கைகள் மனிதத் தலையீடுகள் இன்றி விரைவாகவும், வெளிப்படையாகவும் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளில் உள்ள சிக்கல்களைக் குறைத்து ஒரே மாதிரியான நடைமுறையுடன் PF தொகையைப் பெற EPFO 3.0 வழிவகைச் செய்துள்ள நிலையில், இது ஓய்வூதிய நிதி மேலாண்மையில் திறன், வேகம் மற்றும் நம்பகத்தன்மையை ஒருங்கிணைக்க ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
















