தித்திக்கும் தீபாவளி நெருங்கும் நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடா ஸ்வீட் தயாரிப்பு சூடுபிடித்துள்ளது. இந்த ஸ்வீட் ஆற்காட்டை விட்டா வேறு எங்கும் கிடைக்காது என்பதுதான் இதோட ஸ்பெஷல்.
330 ஆண்டுகால வரலாற்றை ஒரு ஸ்வீட் சுமந்து நிற்கிறது என்றால் நம்ப முடிகிறதா… நம்பித்தான் ஆகனும்,
வரலாற்றில் மிகப் பழமையான நகரமாக அறியப்படும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, பிரியாணிக்கு மட்டுமல்ல “ஸ்பெஷல் மக்கன் பேடா”வுக்கும் பெயர் போனது. உருது மொழியில் மக்கன் என்றால் நயம் என்றும், பேடா என்றால் பாகில் ஊறவைக்கும் இனிப்பு என்று பொருள்படும்.
அதற்கேற்ப ருசியாகவும், தொண்டையில் நழுவிச் செல்லும் அளவுக்கு மென்மையாகவும் இருப்பதால் மக்கன் பேடா என்ற பெயர் வந்தது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்…. தீபாவளி நெருங்கி வரும் நிலையில், ஆற்காட்டில் ஸ்பெஷல் மக்கன் பேடா ஸ்வீட் தயாரிப்பும், விற்பனையும் களைகட்ட தொடங்கியுள்ளது.
நவாப் ஆட்சிக்காலத்தில் மன்னருக்கு வழக்கமான இனிப்புகள் சலித்துப்போக, புதுமையான இனிப்பு வகையைத் தயார் செய்யும்படி சமையற் கலைஞர்களுக்கு உத்தரவிடுகிறார். அதன்படி, அரபு நாடுகள் மற்றும் இந்தியாவில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதுதான் இந்த மக்கன் பேடா.
41 ஆண்டுகளாக மக்கன் பேடா தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மாஸ்டர் மேகநாதன் மக்கன் பேடா செய்முறை விவரிக்கும் விதத்தைப் பார்த்தேலே நாவில் எச்சில் ஊறுகிறது… குங்குமப்பூ, தேனில் ஊறவைத்த அத்திப்பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ருட், பேரிச்சை, வெள்ளரி மற்றும் தர்பூசணி விதை, ஏலக்காய், உலர்த் திராட்சை, ஜாதிக்காய், ஜாபத்திரி போன்ற 15 பொருட்களுடன் இன்னும் பல கலவைகளைச் சேர்த்து மக்கன் பேடா தயாரிக்கப்படுவதாகக் கூறுகிறார் மேகநாதன்.
அன்றைய காலத்தில் மன்னரின் சமையல் அறையில் வேலைப் பார்த்தவர்களின் வழிவந்தவர்கள் தான், ஆற்காட்டின் மண், மனம், சுவை மாறாமல் மக்கன் பேடா தயாரித்து விற்பனைச் செய்து வருகிறார்கள்.
ஆற்காடு ஸ்பெஷன் மக்கன் பேடாவின் சுவைக்கெனத் தனி ரசிகர்ப் பட்டாளமே உள்ளது… ஆற்காட்டில் மட்டுமே கிடைக்கும் என்பதால், தீபாவளிக்காக வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்… அதுமட்டுமின்றி தீபாவளி பரிசாக மக்கள் கடல் கடந்தும் அனுப்பி வைக்கிறார்கள்
என்னங்க… இந்தத் தீபாவளிய ஆற்காடு ஸ்பெஷல் மக்கன் பேடாவோட கொண்டாட தயாரா.