அரிய பூமி காந்தங்களுடன் பல அரிய வகை தாதுக்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்து, உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது சீனா. அரிய வகை பூமி தாதுக்களில் சீனா தனது ஆதிக்கத்தை ஆயுதமாக்க அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த 2023ம் ஆண்டு வரை உலகின் அரிய வகை கனிம உற்பத்தில் 99 சதவீதத்தை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மீதம் ஒரு சதவீதம் வியட்நாமில் உள்ள ஒரு சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உற்பத்தியானது. கடந்த ஒரு வருடமாக அந்தச் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டது.
இதன் மூலம் அரிய வகை தாதுக்களின் விநியோகத்தின் ஏகபோக உரிமை சீனா வசம் வந்துள்ளது. பெண்கள் பயன்படுத்தும் ஹேண்ட் பேக் – பட்டன் முதல், மின்சார வாகனங்கள், ஸ்மார்ட் போன், சோலார் பேனல், போர் விமானங்கள், அதிநவீன ராணுவ ரேடார்கள் வரையிலான தயாரிப்புகளில் 17 அரிய வகை கனிமங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் காந்தங்கள் முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதில் 8 வகை கனிம ஏற்றுமதிக்கு ஏற்கனவே சீனா தடை விதித்திருந்தது. தற்போது மேலும் 5 கனிமங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல், அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான குவால்காம் மீது சீனா அதிரடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குவால்காம் நிறுவனம் அமெரிக்காவில் அமைந்திருந்தாலும், அந்நிறுவனத்தின் குறிப்பிடத் தக்க செயல்பாடுகள் சீனாவில் குவிந்துள்ளன. கூடுதலாக, அமெரிக்க நிறுவனங்களுக்குச் சொந்தமான கப்பல்கள் உட்பட, அமெரிக்காவுடன் உறவுகளைக் கொண்ட கப்பல்களுக்குப் புதிய துறைமுகக் கட்டணங்களைச் சீனா விதித்துள்ளது.
சீனா, அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாகச் சீனா மீதான வரியை 30 சதவீதமாக அமெரிக்கா குறைத்தது.
சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீதான வரியை 10 சதவீதமாகக் குறைத்தது. இந்நிலையில் தென்கொரிய உச்சிமாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், சீனா அரிய வகை தாதுக்களுக்கான தடையை விரிவுபடுத்தியுள்ளது.
இதையடுத்து, சீனா அதிபரைச் சந்திப்பதற்கான காரணம் எதுவும் இல்லை என்று கூறிய ட்ரம்ப், சீனாவில் எல்லாம் விசித்திரமாக நடக்கின்றன என்றும், அமெரிக்காவுடன் சீனா பகையை வளர்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு பாதுகாப்பு உற்பத்தியாளர்களைக் குறிவைத்து, சீனா இந்தத் தடையை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
F-35 ரக போர் விமானங்கள், வர்ஜீனியா மற்றும் கொலம்பியா வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், டோமாஹாக் ஏவுகணைகள், அதிநவீன ரேடார் அமைப்புகள், பிரிடேட்டர் ஆளில்லா ட்ரோன்கள் மற்றும் கூட்டு நேரடி தாக்குதல்களுக்கான தொடர் ஸ்மார்ட் குண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்பங்களுக்கு அமெரிக்காவுக்கு சீனாவின் அரிய வகை தாதுக்கள் மிக முக்கியமானவையாக உள்ளன.
இந்த அதிநவீன பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உற்பத்தியில் ஏற்கெனவே அமெரிக்கா பின்தங்கியுள்ளது. அமெரிக்காவை விட ஆறு மடங்கு வேகமாக ராணுவத் தளவாடங்களையும் அதிநவீன ஆயுதங்களையும் சீனா உற்பத்தி செய்து வருகிறது.
இந்நிலையில், அதிபர் ஜி ஜின் பிங்க் அரசு, அமெரிக்கா மீது ஆத்திரமூட்டும் பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதாக அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சீனாவுக்குப் பதிலளிக்கும் வகையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய மற்றும் ஐரோப்பா நாடுகளுடன் அமெரிக்க ஒருங்கிணைந்து செயல்பட தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
















