கனடாவில் உள்ள ஒரு பகுதி 136 நாட்கள் சூரிய ஒளியையே காணாமல் இருளில் புதைந்து கிடக்கிறது. இப்படியொரு பகுதியை ராணுவம் மற்றும் அறிவியல் தளமாகப் பயன்படுத்தி வருகிறது கனடா… அதைப்பற்றித் தற்போது பார்க்கலாம்.
கனேடிய ஆர்க்டிக்கில், பூமியின் வடதுருவத்தில் இருந்து வெறும் 817 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அலர்ட் பகுதி. இங்கு 136 நாட்கள் இப்பகுதியில் சூரியனே உதிக்காது, கிட்டத்தட்ட இப்பகுதி முழுவதும் முழுமையான இருளில் மூழ்கியிருக்கும்… நமக்கு இந்நிகழ்வு புதிதாகத் தோன்றலாம், ஆனால் அங்கெல்லாம் இது சகஜம்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் தொடங்கி, பிப்ரவரி மாதம் பிற்பகுதி வரை தொடரும். கிட்டத்தட்ட மூன்று மாத உறக்கத்திற்கு பிறகு பிப்ரவரி 27ம் தேதிதான் இங்குச் சூரியனே தூங்கி எழுகிறது… துருவ இரவு தருணத்தின்போது, அலர்ட் பகுதியில் வசிக்கும் மக்கள் மின் விளக்குகளை மட்டுமே நம்பியிருப்பார்களாம். மைனஸ் 40 டிகிரி செல்சியஸ்-க்கும் கீழான வெப்பநிலை, அங்கு வாழ்வதற்கு கடுமையான சூழலை ஏற்படுத்துமாம்.
சூரியனே சில நாட்கள் ஒதுக்கி வைக்கும் இப்பகுதி மனரீதியான மற்றும் உடல்ரீதியான சவால்களையும் அதிகரிக்கும் என்பது ஆய்வாளர்களின் கூற்று. உலகளவில் இருள் நீடித்திருக்கும் இடம் அலர்ட் பகுதி மட்டுமல்ல, ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் சர்க்கிள்ஸ் உள்ள Svalbard, Jan Mayen, Tromso பகுதிகளிலும் இதே நிலையை அனுபவிக்க முடியும்… நார்வேயில் உள்ள Svalbard, Jan Mayen தீவுக்கூட்டங்களில் துருவ இரவானது சுமார் 111 நாட்கள் நீடிக்கும்.
சூரியன் அக்டோபர் 16ம் தேதியன்று மறைந்து, பிப்ரவரி 15ம் தேதி உதிக்கும். இதே போன்று நார்வேயின் வடக்குப்பகுதியான Tromso பகுதியில் நவம்பர் 27ம் தேதி தொடங்கி, ஜனவரி நடுப்பகுதி வரை சுமார் 49 நாட்கள் இருள் சூழ்ந்திருக்கும்.
அலாஸ்காவின் Utqiaġvik உட்கியாக்விக் பகுதியில் நவம்பரின் நடுப்பகுதி தொடங்கி ஜனவரி பிற்பகுதி வரை 65 நாட்கள் துருவ இரவைக் காண முடியும். ரஷ்யாவின் மர்மன்ஸ்க் பகுதியில் 40 நாட்களும், கிரீன்லாந்தின் இலுலிசாட் பகுதியில் நீண்ட நாட்களும் இருள் நிரம்பியிருக்கும்… பூமியின் எதிர்முனையில் உள்ள அண்டார்டிகாவின் தென் துருவம் நவம்பர் முதல் மார்ச் வரை சுமார் 6 மாதங்கள் கடுமையான இருளில் மூழ்கிக் கிடக்கும். இது அங்கு அறிவியல் ஆராய்ச்சிக்கான சூழல் நிலவுகிறது.
துருவ இரவுகள் பூமியின் குறிப்பிடத் தக்க பகுதிகளில் மட்டும் நடப்பதற்கு புவியின் அச்சு சாய்வே காரணமாகக் கூறப்படுகிறது. குளிர்காலங்களில் துருவப் பகுதிகள் சூரிய ஒளியிலிருந்து விலகுவதால் துருவ இரவைப் பெறுகிறது. பூமியின் அரைகோளம் ஒவ்வொரு குளிர்காலத்தின்போதும், சூரியனிடமிருந்து துருவப் பகுதிகள் சாய்ந்து, சூரிய ஒளி வருவதைத் தடுக்கிறது. அதே நேரத்தில், கோடை காலத்தில் இப்பகுதியில் நள்ளிரவிலும் சூரியன் மறையாத நிகழ்வையும் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.