தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு முடியும் வரை எந்த அரசியல் கட்சிக்கும் ரோடு ஷோ, கூட்டங்கள் நடத்த அனுமதிக்க கூடாது என்றும்,
மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை மீறிய தவெக அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும்,உயிரிழந்தவர்களுக்கு குறைந்தது தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில், தமிழக வெற்றி கழகம் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால், அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், டிஜிபிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டார்.
மேலும், மனுவில் எழுப்பப்பட்டுள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாக உள்ளதாகவும்,
வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.