நெல்லை மாநகரின் பிரதான கடை வீதிகளில் பட்டாசுகள், புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் தீபாவளி விற்பனை இறுதிகட்டத்தை எட்டியது. குறிப்பாக பிரதான கடை வீதிகளான நெல்லை சந்திப்பு, டவுன் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளில், பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள், பட்டாசுகள், பலகார வகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வாங்க மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.
இதற்கிடையே நாள் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் மாநகரின் முக்கிய வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் ஷாப்பிங்கிற்காக தங்கள் வாகனங்களில் வந்த பொதுமக்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி, தடையின்றி பொருட்கள் வாங்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.