தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சிறப்பான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், டாடாபாத் பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் சேவை மையம் சார்பில், மோடியின் மகள் திட்டத்தின் கீழ் தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள் மற்றும் புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பரிசுப் பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியின் மகள் திட்டம் வாயிலாக ஆண்டுதோறும் கோவையில் உள்ள தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு, 10 ஆயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கி வருவதாக தெரிவித்தார்.
தான் பாஜக-வில் தேசிய பொறுப்பு வகிக்கும் முன்பிருந்தே பிரதமர் மோடியின் பெயரில் இத்திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தில் இளம் விதவைகளுக்கான கணக்கெடுப்பு நடத்தி, அவர்களின் மறுவாழ்வுக்கான திட்டங்களை நிறைவேற்ற சட்டப்பேரவையில் வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசு சிறப்பான நிதியுதவி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.