தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாத அரிசியை ஒரே தவணையாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பயனாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், 2 கோடியே 25 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.
நாடு முழுதும் கடந்த சீசனில் விவசாயிகளிடம் அதிகம் கொள்முதல் செய்யப்பட்ட நெல், கோதுமை ஆகியவற்றை கிடங்குகளில் பாதுகாப்பாக வைப்பதில், இந்திய உணவு கழகத்திற்கு சிரமம் ஏற்பட்டது.
இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மூன்று மாத அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு, கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டது.
இதற்கு சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, ஜூன் அல்லது ஜூலையில் வழங்க முடிவு செய்தது. ஆனால், ரேஷன் கடைகளில், மூன்று மாத அரிசியை ஒரே தவணையில் வழங்கவில்லை.
இந்நிலையில், நவம்பர் மாதத்திற்கான அரிசியை மட்டும் இம்மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளதால் பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.